திருவெறும்பூர்: தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றிய வளர் கல்விப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் குடும்பத்தினரிடையே மேலோங்கியுள்ளது.
இந்தியாவில் படிப்பறிவு இல்லாதவர்களும், படிப்பை இடையே நிறுத்தியவர்களும் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு குறைந்தது கையெழுத்து இடவாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 1992-ம் ஆண்டு அறிவொளி இயக்கம் என்ற திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. இதில் ஒரு கிராமத்தில் 4 பேர் வீதம் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக அரசு மாதம் ரூ. 70 வழங்கியது.
பிறகு இந்தத் திட்டம் தொடக்கக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டு, அறிவொளித் திட்டத்தில் பணியாற்றியவர்களே பணியாற்றி வந்தனர். அதே தொகுப்பூதியமே வழங்கப்பட்டது. மீண்டும் இந்தத் திட்டம் 2000-மாவது ஆண்டு வளர் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டது.
அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர்களையே இந்த வளர்கல்வித் திட்டத்திலும் அரசு நியமித்தது. இதில் வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை மையப் பொறுப்பாளர், கிராம மையப் பொறுப்பாளர், உதவிப் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 2500, தலைமை மையப் பொறுப்பாளருக்கு ரூ. 1200, கிராம மையப் பொறுப்பாளருக்கு ரூ. 700, உதவி மையப் பொறுப்பாளருக்கு ரூ. 500 வழங்கப்பட்டது.
கல்வி போதிக்க மட்டுமல்லாது, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் கணக்கெடுப்பு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டச் செயல்பாடுகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழாவிற்கு அதன் உறுப்பினர்களை அழைத்து வரும் பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு நீதி நாள் முகாமில் மக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பது போன்ற பல்வேறு பணிகளில் அரசு இவர்களைப் பயன்படுத்திக்கொண்டது.
2008-ம் ஆண்டு முதல் வளர்கல்வித் திட்டத்தை அரசு நிறுத்திவைத்துள்ளது. இதனால், இந்தத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரும் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் உரிய வயதைக் கடந்துவிட்டதோடு, அவர்களின் குடும்பங்கள் போதிய வருவாய் இல்லாத நிலையில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், வளர் கல்வித் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதோடு, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கேட்டு, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உள்ளனர். ஆனால், அரசு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வளர் கல்வி களப் பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் சாவித்திரி கூறியது:
அறிவொளி இயக்கத்திலிருந்து வளர் கல்வித் திட்டம் வரை பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேல்பட்டோர் இதில் பணியாற்றி வந்தனர். மத்திய அரசின் இந்தத் திட்டத்தை மாநில அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தி வந்தது.
வளர் கல்வித் திட்டம் கடந்த 2000-மாவது ஆண்டு தொடங்கி, 2008-ம் ஆண்டு வரை சிறப்பாகச் செயல்பட்டது. இதற்கு முன்பு அறிவொளி இயக்கம், தொடர் கல்வித் திட்டத்திலும் பணியாற்றினோம்.
இந்தத் திட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு படிப்பறிவை கற்றுத் தருவது, பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயல்வழிக் கற்றல் முறையை வயதுவந்தோருக்குக் கற்றுத் தருவது, கிராமப் பகுதியில் உள்ள ஊரக நூலகத்தை கவனித்துக்கொள்வது, பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளியில் சேர்ப்பது, அரசின் பல்வேறு கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வது, மக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பது, இவை மட்டும் அல்லாமல் வட்டார மருத்துவ அலுவலர்களுடன் சேர்ந்து போலியோ சொட்டு மருத்துவ முகாம், இலவச மருத்துவ முகாம், யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை மக்களிடம் வழங்குவது, எய்ட்ஸ் விழிப்புணர்வு, காச நோய் விழிப்புணர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டச் செயல்பாடுகளில் எங்களைப் பயன்படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தையும் அரசு வழங்கவில்லை.
தற்போது வளர் கல்வித் திட்ட காலமும் முடிந்துவிட்டதால், வேறு எந்தப் பணியும் வழங்கப்படாமலும், வருமானம் இல்லாமலும் எங்களது குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. வேறு வேலைக்குச் செல்வதற்கான வயதையும் கடந்துவிட்டதால், எந்தவிதப் பணிக்கும் செல்லமுடியாத நிலையில் உள்ளோம்.
இதனால், பணி நிரந்தரம் செய்யக் கேட்டு பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனால், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசுப் பணிகளில் 275 நாள்கள் பணியாற்றியவர்கள் பலர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 18 ஆண்டுகளாகப் பணியாற்றிய எங்களை ஏன் பணி நிரந்தரம் செய்யக் கூடாது?
கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் வளர் கல்வியில் பணியாற்றியவர்களை அந்த அரசுகள் பணி நிரந்தரம் செய்துள்ளன. ஆனால், தன்னார்வத் தொண்டர்களாக உழைத்த எங்களை தமிழக அரசு ஏன் பணி நிரந்தரம் செய்யக் கூடாது?.
பணி நிரந்தரம் கேட்டு மீண்டும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வளர்கல்வி களப் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பாக பணி நிரந்தரம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


