/

50 ஆண்டுகள் பழமையான காரைக்குடி அரசு ஐ.டி.ஐ. மேம்படுத்தப்படுமா?

காரைக்குடி: சுமார் 50 ஆண்டுகள் பழமையான, காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்தங்கிய மாவட்டமான பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 1958

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:59 pm

எஸ். மயில் வாகனன்

காரைக்குடி: சுமார் 50 ஆண்டுகள் பழமையான, காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்தங்கிய மாவட்டமான பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 1958-ல் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அரசு ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டது. அன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், இந்த நிலையத்தைத் திறந்துவைத்தார்.

இந்த ஐ.டி.ஐ. மூலம், பல தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பழைய இயந்திரங்களை வைத்து பாடம் நடத்தும் நிலையும், பாதுகாப்பற்ற கட்டடங்கள் மற்றும் போதிய பயிற்றுநர்கள் இல்லாத நிலையும் உள்ளது.

இந்த ஐ.டி.ஐ.யில் தற்போது 2 பெண்கள் உள்பட 160 மாணவர்கள் படிக்கின்றனர். மத்திய நுணுக்க மேம்பாட்டுத் திட்டத்தின் (சி.ஓ.இ.) கீழ் 300 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 45 பயிற்றுநர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 16 பயிற்றுநர்களே உள்ளனர். சி.ஓ.இ. திட்ட மாணவர்களுக்கு கூடுதல் பயிற்றுநர்கள் நியமிக்கப்படவில்லை.

மின் கம்பியாளர் (வயர்மேன்), பற்ற வைப்பாளர் (வெல்டர்), இயந்திரவியலாளர் (மெசினிஸ்ட்), கடைசல் (டர்னர்) போன்ற வேலைசார்ந்த படிப்புகளுடன், தற்போது  கணினிப் பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயிற்சி இயந்திரங்கள் மிகவும் பழையதாகிவிட்டன. கணினிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாமல் 25 கம்ப்யூட்டர்கள் பயனற்றுக் கிடக்கின்றன.

இந்நிலையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் உள்ள சி.ஓ.இ. திட்டத்தை சிவகங்கை தொகுதிக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 2008-ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், காரைக்குடி அரசு ஐ.டி.ஐ-யை மேம்படுத்த ரூ. 3.50 கோடி நிதிக்கு அனுமதியளித்து, அன்றைய ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சால் முன்னிலையில் மேம்படுத்தும் பணியையும் தொடங்கிவைத்தார்.

ஆனால், இந்நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் பணி முடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஐ.டி.ஐ தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மதுரை மண்டலத்தின் கீழ் உள்ளது. முதல்வராக மணி இருந்து வருகிறார். இவர் திருச்சியில் இளநிலை பயிற்றுநராகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று, 2006-ஆம் ஆண்டு காரைக்குடி அரசு ஐ.டி.ஐ. முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ-க்களின் முதல்வர் பொறுப்பும், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 20 தனியார் ஐ.டி.ஐ-களையும், சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 10 தனியார் ஐ.டி.ஐ-களையும் கண்காணிக்கும் பொறுப்பும் இவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஐ.டி.ஐ.க்கு சுற்றுச்சுவர் இல்லை. விளையாட்டுத் திடலும் இல்லை. இதுகுறித்து முதல்வர் மணி கூறியது:

ரூ. 87 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ரூ. 15 லட்சத்தில் புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.