/

வருமானமோ டாலரில்... வீதிகளோ நெரிசலில்...

திருப்பூர், ஏப். 25:   நாட்டுக்கே அதிக அளவில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது திருப்பூர். டாலர்களில் வருமானம் வந்தாலும் திருப்பூர் மாநகரின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை மட்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:39 pm

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், ஏப். 25:   நாட்டுக்கே அதிக அளவில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது திருப்பூர். டாலர்களில் வருமானம் வந்தாலும் திருப்பூர் மாநகரின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை மட்டும் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது பொதுமக்களிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

÷சர்வதேச அளவில் பின்னலாடை வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. இதை 2015க்குள் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, உள்நாட்டு வர்த்தகம் மூலமும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. அவ்வாறு, தொழில் வளமுள்ள திருப்பூர் பல்வேறு மாவட்ட, மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் புகலிடமாக விளங்குகிறது.

போக்குவரத்து நெருக்கடி...: அதன்படி, தொழில்துறையில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் திருப்பூர் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பணிகளில் மிகவும் பின்தங்கியே உள்ளது. தற்போதைய திருப்பூர் மாநகரம் ரயில்வே பாதை மற்றும் நொய்யல் ஆற்றின் மூலம் 3 பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த 3 பகுதிகளையும் இணைக்க ஒரு ரயில்வே மேம்பாலமும், 5 ஆற்று பாலங்கள் மட்டுமே உள்ளன. இதனால், மாநகரிலுள்ள எல்லா சாலைகளிலுமே போக்குவரத்து நெருக்கடி என்பது தீராத பிரச்னையாகவே காணப்படுகிறது.

÷பெருகி வரும் இச்சாலை நெருக்கடியை தீர்க்க திருப்பூர் மாநகரில் 5 ரயில்வே மேம் பாலங்கள் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அத ற்கான மத்திய அரசு உத்தரவும், நிதி ஒதுக்கீடும் இதுவரை இல்லாததால் பணிகள் துவங்குவதிலும் தொடர்ந்து காலதாமதம் நிலவுகிறது.

÷இது தவிர, தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்லும் திருப்பூர் மாநகரில் ஏற்கெனவே உள்ள 2 பஸ் நிலையங்களுடன், திருப்பூரின் தெற்கு பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அதற்கான நிலம் தேர்வு செய்யும் பணியிலும் உரிய வேகம் காட்டப்படாமல் முடங்கியுள்ளது.

தீராத குப்பை பிரச்னை...: இவற்றையெல்லாம் விட திருப்பூரில் சுற்றுச்சூழல் சீர்கேடு, மிகப்பெரிய பிரச்னையாக தலை தூக்கியுள்ளது. தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை முறையாக அப்புறப்படுத்த போதுமான இடம் இல்லாததால் 52வது வார்டு வெள்ளியங்காடு பாறைக்குழியிலேயே பெருமளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் தினமும் அதிக அளவு குப்பைகள் கொட்டுவதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

÷இப்பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியுள்ள கோயில் வழி உரத்தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தவும், இடுவாயில் புதிய உரத்தொழிற்சாலை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், அப்பணிகளிலும் முழுமையான வேகம் காட்டப்படாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு...: இவ்வாறு பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ள திருப்பூர் மாநகராட்சியுடன் 2011ம் ஆண்டு முதல் 2 நகராட்சி, 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. அதன்படி, விரிவுபடுத்தப்படும் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டார ஊராட்சிகளில் தற்போது வழங்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால், கோடை காலத்தில் பொதுமக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகின்றனர். பெருகி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் எனவும், திருப்பூருக்கு 4வது கூட்டுக்குடிநீர் திட்டம் அமைத்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை அடுத்து திருப்பூரை மாநகராட்சியாகவும், மாவட்ட தலைநகராகவும் மாநில அரசு தரம் உயர்த்தியபோது இம்மாநகரின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தமிழக பட்ஜெட் அறிக்கையில் திருப்பூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த எவ்வித நிதியும் ஒதுக்காதது மாநகர பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இப்பிரச்னை கடந்த முறை நடந்த மாநகராட்சி கூட்டத்தில் எதிர்கட்சிகள் மத்தியிலும் பலமாக எதிரொலித்தது.

சிறப்பு நிதி தேவை...: அதன்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகப்படியான வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரின் தொழில் வளர்ச்சியை மென்மேலும் ஊக்கப்படுத்த உள்கட்டமைப்பு, குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். தவிர, புதிய மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைவுபடுத்த வேண்டும்.

÷மேலும், மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி வருவாய் அதிகளவில் பெற்றுத்தரும் திருப்பூருக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நகரின் உள்கட்டமைப்பு, மின் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.