பெரம்பலூர், ஏப். 19: எறையூர் அரசு சர்க்கரை ஆலை கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிக்க தகுதியற்றதாக மாறியதால், இப் பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் அரசு சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டு, இப் பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதால் பல்வேறு வகையான நோய்கள் பரவி, மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எறையூர் அரசு பொதுத் துறை சர்க்கரை ஆலை, விவசாயிகளின் பங்குத்தொகையுடன் கடந்த 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முறையாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, ஆலையில் இருந்து கழிவு நீர் சுத்தகரிப்பு செய்யப்படாமலும், முறையான வடிகால் வசதியின்றியும் வெளியேற்றப்படுகிறது. இதனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஆலையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கழிவு நீர் தேங்கி, எறையூர் கிராமம் முழுவதும் நிலத்தடி நீர் மாசுபட்டு காணப்படுகிறது. மாசடைந்த இந்த நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு, பயன்படுத்தும் அப் பகுதி மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்பத்துகின்றது. சுமார் 15,000 பேர் வசித்து வரும் எறையூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததாலும், தற்போது நிலவி வரும் தொடர் மின் வெட்டு காரணமாகவும், அப் பகுதி மக்கள் குடிநீருக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்று வரும் சூழல் உள்ளது.
மாசடைந்த நீரைப் பயன்படுத்தி துணி துவைத்தால் ஆடைகளின் வர்ணம் மாறிப் போவதோடு, பாத்திரங்களும் கறை படிந்து விடுகின்றன.
இந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி, விளைச்சல் இன்றி வருவாய் இழப்பு ஏற்படுவதாக எறையூர் கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், தேங்கியுள்ள கழிவு நீர் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதோடு, கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. ஆலையின் அரைவைக் காலங்களில் அங்கிருந்து வெளியேறும் கரும்புகையிலிருந்து கொட்டும் கருமை நிற சாம்பலால், ஆடைகள் கரியாவதுடன், உடலில் அரிப்பும் ஏற்படுகிறது.
பொதுவாக, இதுபோன்ற ஆலைகள் இயங்கும் பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியார் ஆலைகளுக்கு விதிக்கப்படும் சுற்றுச்சூழல் விதிமுறைகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தளர்த்தப்படுவதே சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாகிறது. ஆலையினால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம், ஆலை நிர்வாகம், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடமும் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.