/

அரசுப் பள்ளிகளில் கட்டண வசூல்: மறைமுகமாக ஊக்குவிக்கும் மாநில அரசு

சேலம், ஜூன் 27:   தமிழகத்தில் பள்ளி செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு இல்லாததே பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என்று, அரசு மற்றும் உதவி பெறும் பள்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:29 pm

க. தங்கராஜா

சேலம், ஜூன் 27:   தமிழகத்தில் பள்ளி செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு இல்லாததே பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என்று, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  தமிழகத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளின் செலவுகளுக்காக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நிதி உதவி வழங்குகிறது.

  கல்வி ஆண்டு முழுவதுக்கும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு (கட்டமைப்பு, அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொள்ள) ஒரு மாணவருக்கு ரூ.37 வீதமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.107-ம், கலைப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.92 வீதமும் வழங்கப்படுகிறது.

  அத்துடன் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மாணவர் சேர்க்கையின்போது ரூ.25 வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையே ஒரு பள்ளிக்கான வரவு ஆகும்.

  ஆனால் ஆண்டு நிர்வாக செலவினமோ இதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது என்கிறார் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன்.

  பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. 1:60 என்ற விகிதத்தில்தான் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தலைமை ஆசிரியர்கள் சில ஆசிரியர்களை நியமனம் செய்கின்றனர்.

  இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வரை சம்பளம் வழங்க வேண்டும். இதேபோல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் வகுப்புகள் உள்ளன. ஆனால் இதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

  இதனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியத்தையும் (மாதம் ரூ.3 ஆயிரம் முதல்) பள்ளி நிர்வாகமே வழங்குகிறது. மேலும் ஏதாவது ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டாலோ, நீண்ட விடுமுறையில் சென்றாலோ அவர்களுக்கு பதில் மாற்று ஆசிரியர்களை நாங்களே சம்பளத்துக்கு நியமிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

  இவை ஆசிரியர்களுக்கான செலவு மட்டுமே, இதையடுத்து பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவலாளிகள் என பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஊதியம் வழங்க வேண்டிய பட்டியல் மேலும் நீள்கிறது.

  அரசு வழங்கும் சொற்பத் தொகை இந்த செலவுகளை எந்த விதத்திலும் ஈடு செய்வதாக இல்லை என்கின்றனர் தலைமை ஆசிரியர்கள்.

  பள்ளிக்கு சாக்பீஸ், வரைபடங்கள், துடைப்பான்கள் வாங்குவது முதல் தொலைப்பேசிக் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துவது வரை நாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

  அத்துடன் உடைந்துபோகும் குடிநீர் குழாய்களை பராமரிப்பது, காயமடையும் மாணவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது என்று பள்ளித் தலைமை ஆசிரியரின் தலையில் விழும் செலவினங்கள் ஏராளம் என்கின்றனர் அவர்கள்.

  பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு கடந்த 2005-06 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4,110 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 2008-09 ஆம் ஆண்டில் இது 7,852 கோடியாகவும், நடப்பாண்டில் (2009-10) ஆண்டில் 9,147 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

  ஆனால் நிதி ஒதுக்கீடு உயரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும், செலவினங்களும், விலைவாசியும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. எனவே மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

  மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கும் விதமாக குறைவான நிதி ஒதுக்குவதால், பள்ளிகளின் நிதி தேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேவைக்கு அதிகமாக கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர்.

  சேலத்தில் கடந்த வாரம் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் ரூ.12 லட்சம் கட்டணம் வசூலித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

  அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யாதவரை பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடியாது.

  இதனால் இலவசக் கல்வி முறை கேள்விக்குறியாகி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.