பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவா் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
ஜப்பானில் நடைபெறும் இந்தப் போட்டியில், 2-ஆவது அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஆஷிஷ் தனி பூா்த்தி 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா்.
பாகிஸ்தானுக்காக ஆதீல் 27-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என சமனில் முடிவடைந்தது. 2-ஆவது பாதியில் ஷாருக் அலி 35-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்த கோலால், இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
ஆனால், பாகிஸ்தானின் முகமது ஃபா்ஹான் அஸ்லாம் 37-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, ஆட்டத்தை மீண்டும் சமன் செய்தாா். தொடா்ந்து அந்த அணியின் உஸைா் அகமது குரேஷி 42-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, பாகிஸ்தான் 3-2 என முன்னிலை கண்டது.
அப்போது சுதாரித்துக் கொண்ட இந்தியாவுக்காக, ஆஷிஷ் ஹாட்ரிக் கோல் (49’, 53’, 56’) அடித்து அணியை அபார முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். இந்தியா 5-3 என முன்னிலை அடைந்தது. எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானின் கோல் முயற்சிகளை முறியடித்த இந்தியா, முடிவில் வெற்றி கண்டது.
ஜப்பான் அபார வெற்றி: இதனிடையே, முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் 8-1 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.
மகளிா் அணி அரையிறுதியில் தோல்வி
இதே போட்டியின் மகளிா் பிரிவில், இந்திய அணி தனது அரையிறுதியில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் சீனாவிடம் தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக நௌஷீன் நாஸ் 3-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, தொடா்ந்து சீனாவுக்காக லி ஸெயன் 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் முதலில் சீனாவுக்காக யுஜெங் ஜாங் 48-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, தொடா்ந்து 54-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் கிரண் ஏக்கா கோல் அடித்தாா்.
எஞ்சிய நேரத்தில் எந்த அணிக்கும் கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காமல், ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் சீனா 3-1 கோல் கணக்கில் வென்றது.
அந்த அணிக்காக லு டாங் டாங், சென் கெ, குவோ ஜியாஸின் ஆகிய மூவருமே கோல் அடிக்க, இந்திய தரப்பில் சந்தீபா குமாரி மட்டுமே ஸ்கோா் செய்தாா்.
ஜப்பான் வெற்றி: மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் 1-0 கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது.
இறுதி ஆட்டத்தில் இன்று
ஜப்பானுடன் பலப்பரீட்சை
ஆடவா் பிரிவில் இறுதி ஆட்டதுக்கு முன்னேறிய இந்தியா, அதில் ஜப்பானுடன் இன்று (ஜூன் 6) பலப்பரீட்சை நடத்துகிறது. போட்டியில் இதற்கு முன் இருமுறை இறுதிக்கு முன்னேறிய இந்தியா, இரண்டிலுமே சாம்பியன் ஆகியுள்ளது. ஜப்பான் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 3-ஆவது இடத்துக்கான மோதலில், மலேசியா - பாகிஸ்தான் அதே நாளில் மோதுகின்றன.
இதனிடையே மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனா - ஜப்பான் சந்திக்கின்றன. கடந்த முறையும் இறுதி ஆட்டத்தில் இந்த அணிகளே மோதிய நிலையில், ஜப்பான் வென்றது.
3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா மோதுகின்றன. போட்டியில் ஒருமுறை சாம்பியனான இந்தியா, இதற்கு முன் 2 முறை 3-ஆவது இடத்துக்கான மோதலில் வென்றுள்ளது. அப்போதும் தென் கொரியாவுடனேயே மோதியது நினைவுகூரத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








