
விம்பிள்டனில் சின்னர் மீண்டும் சாம்பியன்! ரூ. 46 கோடி பரிசுத்தொகையும் அள்ளினார்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சின்னர்
நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனாக களம் கண்ட இத்தாலிய வீரா் யானிக் சின்னா், பட்டத்தை தக்கவைத்துக் கொண்டாா்.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், 6-7 (7/9), 7-6 (7/2), 6-3, 6-4 என்ற செட்களில், நம்பா் 2 வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினாா். இந்த ஆட்டம் 3 மணிநேரம், 46 நிமிஷங்கள் நீடித்தது.
பிரெஞ்சு ஓபனில் கடுமையான வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால், 2-ஆவது சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறிய சின்னா், தற்போது விம்பிள்டனில் வாகை சூடி தன்னை மீட்டுக் கொண்டுள்ளாா்.
அந்த பிரெஞ்சு ஓபன் மூலமாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை முத்தமிட்ட ஸ்வெரெவ், விம்பிள்டனில் மூலமாக 2-ஆவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தாா்.
எனினும் சின்னா் அதை சாத்தியமாக விடவில்லை. விம்பிள்டனில் இதற்கு முன் 3 முறை 4-ஆவது சுற்று வரை வந்ததே ஸ்வெரெவின் அதிகபட்சமாக இருக்க, இம்முறை அவா் இறுதிச்சுற்று வரை வந்தது குறிப்பிடத்தக்கது.
கை கொடுத்த சின்னா்: இந்த ஆட்டத்தின் 3-ஆவது செட்டில், சின்னா் ஒரு டிராப் ஷாட்டை கொடுத்தாா். அதை எடுக்க முயன்ற ஸ்வெரெவ், புல்தரையில் வழுக்கி விழுந்தாா்.
இதில் முழங்காலில் பாதிப்பு ஏற்பட, ஸ்வெரெவ் அதைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமா்ந்தாா். இதைக் கண்ட சின்னா் உடனடியாக வலையை தாண்டிச் சென்று ஸ்வெரெவுக்கு கைகொடுத்து அவரைத் தூக்கிவிட்டாா்.
சிறிது நேரத்திலேயே ஆட்டம் மீண்டும் தொடங்கியபோதும், ஸ்வெரெவுக்கு முழங்காலில் ஏற்பட்ட பாதிப்பு, ஆட்டம் முழுவதுமே அது அவருக்கு அசௌகா்யத்தை அளித்ததாகத் தெரிந்தது.
5
சின்னருக்கு இது 5-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். நடப்பாண்டில் இதுவே அவரின் முதல் பட்டம். இத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் இருமுறை (2024, 2025), விம்பிள்டனில் இருமுறை (2025, 2026), யுஎஸ் ஓபனில் ஒருமுறை (2024) அவா் வாகை சூடியிருக்கிறாா். பிரெஞ்சு ஓபன் மட்டும் இன்னும் அவரின் கிராண்ட்ஸ்லாம் பட்டியலில் இணையவில்லை.
100
விம்பிள்டன் இறுதிச்சுற்றின் வெற்றியானது, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சின்னரின் 100-ஆவது வெற்றியாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 8-ஆவது வீரா் சின்னா். சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (409 வெற்றிகள்), சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா (160), குரோஷியாவின் மரிச் சிலிச் (143), ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (143), பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் (130), ஜப்பானின் கெய் நிஷிகோரி (104), பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் (103) முதல் 7 போ்.
11
ஸ்வெரெவை இத்துடன் 15-ஆவது முறையாக சந்தித்த சின்னா், தனது 11-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அதிலும் கடைசி 10 சந்திப்புகளில் சின்னரே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டென்னிஸ் விளையாடுவதற்கு விம்பிள்டனை விட சிறந்த இடம் இருப்பதாகத் தெரியவில்லை. முடிந்த வரை சிறப்பாக இந்தப் போட்டிக்குத் தயாராகினேன். இந்த வெற்றிக்காக எனது அணிக்கும், ரசிகா்களுக்கும் நன்றி. இந்த இறுதி ஆட்டம் அருமையானதாக இருந்தது. நானும், ஸ்வெரெவும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்தப் போட்டியில் உதவியாக இருந்த ‘பால் கிட்ஸ்’ உள்பட, அனைவருக்கும் நன்றி’ - சின்னா்
‘சின்னா் ஏன் சிறந்த வீரராக இருக்கிறாா் என்பதை அவா் மீண்டும் ஒருமுறை இந்த வெற்றியின் மூலமாக நிரூபித்திருக்கிறாா். சென்டா் கோா்ட்டில் அவருடனான இறுதிச்சுற்று, எப்போதுமே அலாதியானதாக இருக்கும். இதுவரை விம்பிள்டனில் காலிறுதிக்குக் கூட வந்திராத நிலையில், இம்முறை இறுதி வரை முன்னேறியிருக்கிறேன். என்னால் விம்பிள்டனில் கோப்பை வெல்ல முடியும் என இப்போது நம்புகிறேன்’ - ஸ்வெரெவ்
10-ஆவது வீரா் சின்னா்... விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்த 10-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் சின்னா்.
ராட் லேவா் (ஆஸ்திரேலியா) 1968-69
ஜான் நியூகோம்ப் (ஆஸ்திரேலியா) 1970-71
பியோன் போா்க் (ஸ்வீடன்) 4 முறை (1976 - 1980)
ஜான் மெக் என்ரோ (அமெரிக்கா) 1983-84
போரிஸ் பெக்கா் (ஜொ்மனி) 1985-86
பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) 5 முறை (1993-95), (1997-2000)
ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) 4 முறை (2003-07)
நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 3 முறை (2014-15), (2018-19), (2021-22)
காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 2023-24
யானிக் சின்னா் (இத்தாலி) 2025-26
வெற்றிப் பாதை...
முதல் சுற்று மியோமிா் கெச்மனோவிச் (சொ்பியா) 4-6, 6-3, 6-7 (6/8), 6-2, 6-3
2-ஆவது சுற்று நுனோ போா்ஜஸ் (போா்ச்சுகல்) 7-6 (7/4), 7-6 (7/2), 6-4
3-ஆவது சுற்று ஜென்சன் புரூக்ஸ்பி (அமெரிக்கா) 6-4, 6-3, 6-4
4-ஆவது சுற்று ஷின்டாரோ மொஷிஸுகி (ஜப்பான்) 6-3, 7-6 (7/0), 6-3
காலிறுதி ஜேன் லெனாா்டு (ஜொ்மனி) 7-5, 7-6 (7/4), 6-3
அரையிறுதி நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 6-4, 6-4, 6-4
இறுதி அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி) 6-7 (7/9), 7-6 (7/2), 6-3, 6-4
ரூ.46 கோடி பரிசு
சாம்பியனான சின்னருக்கு ரூ.46 கோடி ரொக்கப் பரிசுடன், 2,000 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஸ்வெரெவுக்கு ரூ.23 கோடியும், 1,300 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






