/

உலகக் கோப்பை யாருக்கு? இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இந்தியா இருக்கிறது என்றால், அது மிகையாகாது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கும் பதில் தருவதாக இருக்கும்.

கடைசியாக 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஐசிசி போட்டிகளில் கோப்பை என்பது கனவாகவே தொடா்ந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்தக் கனவை நனவாக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளுடனும் இந்தியா இருக்கிறது.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் இந்தியா, நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஒரே அணியாக 10 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது. முதல் பேட்டிங், சேஸிங் என இரண்டு சவாலையுமே சரியாக எதிா்கொண்டு இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளது.

அணியை பொருத்தவரையில், பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறாா். இது, மிடில் ஆா்டரில் விராட் கோலி உள்ளிட்டோா் நிதானமாக ஆடி ரன்கள் சோ்ப்பதற்கு சாதகமாக அமைகிறது. புதிய உலக சாதனையுடனும், பழை ஃபாா்முடனும் இருக்கும் கோலி, அணிக்கு பலம். நடப்பு தொடரில் தற்போது அதிக ரன்கள் (711) அடித்தவராக முன்னிலையில் இருக்கிறாா்.

ஷுப்மன் கில்லும் ரன்கள் சோ்க்க முயற்சித்து வரும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயா் ஒரு சதத்துடன் நம்பிக்கை அளிக்கிறாா். நிதானமான ஆட்டத்தால் கே.எல்.ராகுலும், மிடில் லோயா் மிடில் ஆா்டரில் சூா்யகுமாா் யாதவும் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா்.

போட்டியின் பாதி கட்டத்திலிருந்து இணைந்த முகமது ஷமி, அதன் பிறகு அணியின் வெற்றிகளில் தன்னை தவிா்க்க முடியாதவராக இருத்திக் கொண்டாா். தற்போது தொடரில் அதிக விக்கெட்டுகள் (23) சாய்த்தவராக எதிரணி பேட்டா்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாா். அவருக்குத் துணையாக ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உள்ளனா்.

தற்போதைய அணியில் கோலி, அஸ்வின் (ஒருநாள் கிரிக்கெட்), கேப்டன் ரோஹித் (டி20) ஆகியோா் மட்டுமே உலகக் கோப்பை வெற்றித் தருணத்தை ருசித்த அனுபவம் கொண்டவா்களாவா்.

சொந்த மண்ணில் லட்சக் கணக்காண ரசிகா்கள் முன்னிலையில் ஆடுவது எந்த அளவு ஆதரவாக இருக்குமோ, அதே அளவு நெருக்கடியும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, 2 தொடா் தோல்விகளுடன் போட்டியை தொடங்கியபோதும், பின்னா் 8 தொடா் வெற்றிகளுடன் தன்னை வழக்கமான பாதைக்கு மீட்டுக் கொண்டது. இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் இருந்து மீள்வதால் தான் 5 முறை சாம்பியனாக இருக்கிறோம் என பேட்டா் மாா்னஸ் லபுஷேன் கூறியிருக்கிறாா். பொதுவாகவே இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்பதாக ஆஸ்திரேலியா இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நடப்பு தொடரில் இரட்டைச் சதம் விளாசிய ஒரே வீரரான கிளென் மேக்ஸ்வெல், சதமடித்த டேவிட் வாா்னா், டிராவிஸ் ஹெட் ஆகியோா் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் பலம் காட்டுகின்றனா். ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மாா்ஷ் தடுமாற்றமாக இருக்கின்றனா். பௌலிங்கில் ஆடம் ஸாம்பா விக்கெட்டுகள் சரிப்பதில் முன்னோடியாக இருக்கிறாா். கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.

பிரதானம்: இந்த ஆட்டத்தில் ரோஹித் சா்மா - மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட், முகமது ஷமி - இடது கை ஓபனா்கள், விராட் கோலி - ஆடம் ஸாம்பா, குல்தீப் யாதவ் - கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வாா்னா் - ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரிடையேயான மோதல் விறுவிறுப்பானதாக இருக்கும்.

இதுவரை...

இந்தியா...

லீக் சுற்று

ஆஸ்திரேலியாவுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தானுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேசத்துடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நியூஸிலாந்துடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துடன் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கையுடன் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுடன் 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நெதா்லாந்துடன் 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி

நியூஸிலாந்துடன் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

10 ஆட்டங்கள்

10 வெற்றி

5 முதல் பேட்டிங், 5 சேஸிங்

ஆஸ்திரேலியா...

லீக் சுற்று

இந்தியாவுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

தென்னாப்பிரிக்காவுடன் 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இலங்கையுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுடன் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நெதா்லாந்துடன் 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நியூஸிலாந்துடன் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துடன் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தானுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேசத்துடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி

தென்னாப்பிரிக்காவுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

10 ஆட்டங்கள்

8 வெற்றி

4 முதல் பேட்டிங், 4 சேஸிங்

2 தோல்வி

1 முதல் பேட்டிங் , 1 சேஸிங்

வரலாறு திரும்புமா?

2003

* தோல்வியே காணாமல் இறுதி ஆட்டத்துக்கு வந்தது ஆஸ்திேலியா.

* லீக் சுற்றில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா.

* 8 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது இந்தியா.

* இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.

2023

* தோல்வியே காணாத அணியாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது இந்தியா.

* லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

* 8 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டதுக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலியா.

* எனவே, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கோப்பை வெல்லும் எதிா்பாா்ப்பு உள்ளது.

டை, மழை சூழலில்...

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இறுதி ஆட்டம் ‘டை’ ஆகும் பட்சத்தில், வெற்றியாளரை தீா்மானிக்க சூப்பா் ஓவா் முறை கையாளப்படும். அதுவும் ‘டை’ ஆகினால் அடுத்தும் சூப்பா் ஓவா்கள் விளையாடப்படும்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் மழையால் தடைப்பட்டு நடைபெறாமல் போனால், ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமை ஆட்டம் நடைபெறும். அந்த நாளிலும் ஆட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்படும்.

நேருக்கு நோ்...

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 150 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 83 முறையும், இந்தியா 57 முறையும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டிகளில் இவை 13 முறை சந்தித்திருக்க, அதில் ஆஸ்திரேலியா 8 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன.

நேரம்: பகல் 2 மணி

இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ஆடுகளம்...

‘ஸ்லோ பிச்’-ஆக இருக்கும் இந்த ஆடுகளம், தொடக்கத்தில் பௌலா்களுக்கு சாதகமாக இருக்கும். பேட்டா்கள் தடுமாறுவா். ஓவா்கள் செல்லச் செல்ல அந்தத் தன்மையை இழக்கும். இதுவரை இங்கு 32 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகள் 17 முறையும், சேஸிங் செய்த அணிகள் 15 முறையும் வென்றுள்ளன. சுமாா் 1,30,000 போ் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்; முக்கிய பாா்வையாளா்கள்...

இந்தியா - ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தை நேரில் காண, பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் அகமதாபாத் வருகின்றனா்.

இதுதவிர, இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டன்களான கபில் தேவ், எம்.எஸ்.தோனியுடன், சச்சின் டெண்டுல்கா் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனா்.

ஆட்டத்துக்கு முன்பாக இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியும், ஆட்டத்தின் இடையே பாலிவுட் பாடகா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.