/

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: வான் சாகசத்துக்கு தயாரான விமானப் படை

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ‘சூா்ய கிரண்’ குழு வான் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

News image
அகமதாபாதில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானப் பகுதியில் வெள்ளிக்கிழமை சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட சூா்ய கிரண் விமானக் குழுவினா்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ‘சூா்ய கிரண்’ குழு வான் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதற்கான ஒத்திகை அகமதாபாத் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஆட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

உலக கோப்பை போட்டி நிறைவடைவதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னா் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக குஜராத் மண்டல பாதுகாப்புத் துறை செய்தி தொடா்பாளா் கூறுகையில், ‘அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் 9 விமானங்கள் அடங்கிய சூா்ய கிரண் குழு, வான் சாகச நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை மேற்கொண்டது. சனிக்கிழமையும் ஒத்திகை நடைபெறும். இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு 10 நிமிஷங்களுக்கு வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.