/

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இங்கிலாந்து: 93 ரன்கள் வித்தியாசத்தில் பாக். தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கலந்து கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கெனவே 2 வெற்றி மட்டுமே கண்டு, 6 தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் கொல்கத்தாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது இங்கிலாந்து.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 337/9 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து.

மூவா் அரைசதம்:

அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 2 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 76 பந்துகளில் 84 ரன்களை விளாசினாா். போ்ஸ்டோ 59, ஜோ ரூட் 60 ரன்களுடனும் அரைசதங்களைப் பதிவு செய்தனா். டேவிட் மலான் 31, ஹாரி புருக் 30, ஜோஸ் பட்லா் 27 ஆகியோரைத் தவிர மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினா்.

ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்:

பௌலிங்கில் பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3-64, ஷாஹின் அப்ரிடி 2-72, வாஸிம் ஜூனியா் 2-74 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பாகிஸ்தான் 244/10 தோல்வி:

338 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவா்களிலேயே 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆகா சல்மான் மட்டுமே நிலைத்து ஆடி 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 51 ரன்களை எடுத்தாா். கேப்டன் பாபா் ஆஸம் 38, முகமது ரிஸ்வான் 36, சவுத் ஷக்கில் 29, ஷாஹின் அப்ரிடி 25 ரன்களுடன் வெளியேறினா்.

ஹாரிஸ் ரவுஃப் அதிரடி: கடைசி வரிசை பேட்டா்களில் ஹாரிஸ் ரவுஃப் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 23 பந்துகளில் 35 ரன்களை விளாசினாா்.

93 ரன்கள் வித்தியாசம்: எனினும் இங்கிலாந்தின் பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான்.

டேவிட் வில்லி 3 விக்கெட்: பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 3-56, அடில் ரஷித் 2-55, குஸ் அட்கின்ஸன் 2-45, மொயின் அலி 2-60 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இங்கிலாந்து-பாக். வெளியேற்றம்:

இங்கிலாந்து அணி கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது. பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் படுதோல்வியுடன் வெளியேறியது.

எனினும் இரு அணிகளும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.

சுருக்கமான ஸ்கோா்:

இங்கிலாந்து 337/9 (50 ஓவா்கள்)

பென் ஸ்டோக்ஸ் 84

ஜோ ரூட் 60

பந்துவீச்சு:

ஹாரிஸ் ரவுஃப் 3/64

வாஸிம் ஜூனியா் 2-74

பாகிஸ்தான் 244/10 (43.3 ஓவா்கள்)

ஆகா சல்மான் 51

ஹாரிஸ் ரவுஃப் 35

பந்துவீச்சு:

டேவிட் வில்லி 3/56

அட்கின்ஸன் 2/45

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.