/

அஞ்சலி டெண்டுல்கர் பிறந்த நாள்: சச்சினின் காதல் கதை!

ஒரு ரசிகையாக சச்சினின் அழகில் மயங்கி, பிறகு அவரைக் காதல் திருமணம் செய்துள்ளார் அஞ்சலி.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:48 am

எழில்

சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சலி மும்பையில் பிறந்தவர். அவருடைய தந்தை ஆனந்த் மேத்தா, ஒரு தொழிலதிபர். தாய், இங்கிலாந்து வம்சாவளியைச் சேர்ந்த அன்னபெல் மேத்தா.

Story image

1990-ல் அஞ்சலியைச் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், 5 வருடங்கள் காதலித்து, 1995-ல் திருமணம் செய்துகொண்டார். மருத்துவரான அஞ்சலி, சச்சினைத் திருமணம் செய்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக மருத்துவத் தொழிலைக் கைவிட்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் அர்ஜுன் என்கிற மகனும் உள்ளார்கள். 
 

சச்சினின் அழகான காதல்! 

Story image



தன்னுடைய காதல் கதையை, சுயசரிதை நூலில் விரிவாகக் கூறியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

ஒரு ரசிகையாக சச்சினின் அழகில் மயங்கி, பிறகு அவரைக் காதல் திருமணம் செய்துள்ளார் அஞ்சலி.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து அப்போதுதான் மும்பைக்குத் திரும்பியிருக்கிறார் சச்சின். விமான நிலையத்தில் தனது பைகளை எடுக்கும்போது, பார்வையாளர் பகுதியிலிருந்து ஓர் இளம் பெண் தன்னை உற்றுப் பார்ப்பதை கண்டார். அஞ்சலி தனது தோழியுடன் நின்றுகொண்டு சச்சினை வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார். சில நொடிகள் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். 

Story image

விமான நிலையத்திலிருந்து சச்சின் வெளியேறியபோது அஞ்சலியும் அவருடைய தோழியும் பின்னாலேயே தொடர்ந்து வந்துள்ளார்கள். சச்சின் அவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஹீ ஈஸ் சோ கியூட் என்று சச்சினைப் பற்றி தன் தோழியிடம் புகழ்ந்துள்ளார் அஞ்சலி. இதைக் கேட்ட சச்சினுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. சச்சினுடன் வந்த அவருடைய நண்பர், ஓர் அழகான பெண் உன்னிடம் பேச விரும்புகிறாள் என்று  கூறியிருக்கிறார். சச்சினும் அஞ்சலியின் அழகைக் கண்டு வியந்தாலும் வெளியே தனக்காக தன்னுடைய சகோதரர் காத்திருப்பதால், அஞ்சலியைச் சந்திக்க முடியாது என்று நண்பரிடம் கூறிவிட்டார். அந்தச் சமயத்தில், அஞ்சலியை இன்னொரு ரசிகை என்றுதான் சச்சின் நினைத்திருப்பார். 

Story image

கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வந்த நண்பரிடம் சச்சின் வீட்டுத் தரைவழித் தொலைப்பேசி எண்ணை வாங்கியிருக்கிறார் அஞ்சலி. தைரியமாக போனில் அழைத்துள்ளார். அவர் அதிர்ஷ்டம், அன்றைக்கு சச்சின் போனை எடுத்திருக்கிறார்.

நான் தான் அஞ்சலி. உங்களை விமான நிலையத்தில் பார்த்தேன். உங்களைச் சந்திக்க முடியுமா? - அஞ்சலி குரலில் பதற்றம். 

உங்களை ஞாபகம் இருக்கிறது. நான் விளையாடும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் வேண்டுமானால் சந்திக்கலாம் எனச் சாதாரணமாகப் பதில் கூறியிருக்கிறார் சச்சின். 

Story image

என்னைத் தெரியுமா உங்களுக்கு? விமான நிலையத்துக்கு நான் என்ன உடையில் வந்தேன் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம் எனத் தைரியமாக அஞ்சலி கேள்வி கேட்க, ஆரஞ்சு டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் என்று சரியான பதிலைச் சொல்லி அஞ்சலியை வியப்பூட்டினார் சச்சின். 

Story image

அடுத்த நாள், சச்சின் சொன்ன இடத்துக்கு அஞ்சலி வந்திருக்கிறார். ஆனால் அங்கே பலர் இருந்ததால் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. எனினும் (வீட்டுத்) தொலைபேசி எண்களைப் பறிமாறிக் கொண்டார்கள். பிறகு அடிக்கடி போனில் பேசிக்கொண்டு தங்கள் நட்பையும் காதலையும் வளர்த்திருக்கிறார்கள். 

அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்து, ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் சச்சின். பத்திரிகையாளர் என்கிற அடையாளத்துடன் அஞ்சலியை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். நிருபர் போல வீட்டுக்கு வந்த அஞ்சலிக்கு இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த சாக்லேட்களைத் தர முயன்றார் சச்சின். ஆனால் இரண்டு சாக்லெட்கள் தவிர மத்ததெல்லாம் காலி. இந்த இரண்டையும் துண்டாக்கி, ஒரு தட்டில் வைத்து அஞ்சலிக்கு வழங்கியிருக்கிறார் சச்சின். அந்த அழகான தருணத்தைத் தன் நூலில் பகிர்ந்துள்ளார். 

Story image

அஞ்சலி அருகில் இருக்கும்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்துள்ளார் சச்சின். இதனால் அவருடைய மனம் அஞ்சலியை ஏற்றுக்கொண்டது. இருவர் சந்திப்பிலும் அஞ்சலியே அதிகமாகப் பேசியிருக்கிறார். அப்போது சச்சினுக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது. இதனால் அவர் குறைவாகவே பேசியிருக்கிறார். சிலசமயம் அஞ்சலியைச் சந்திக்க 40 நிமிடங்கள் கார் ஓட்டி, அவர் வீட்டுக்குப் பக்கம் செல்வார் சச்சின். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் அஞ்சலியால் வெளியே வர முடியாது. சச்சினால் அஞ்சலி வீட்டுக்கும் செல்ல முடியாது, ரசிகர்களின் தொல்லைக்குப் பயந்து காரை விட்டு வெளியேயும் வர முடியாது. பொதுத் தொலைப்பேசியிலிருந்து அஞ்சலி வீட்டுக்கு போன் செய்யவும் முடியாது. இதனால் வேறுவழியின்றி மீண்டும் காரில் வீட்டுக்குத் திரும்பி விடுவார். பிறகு, வீட்டிலிருந்து அஞ்சலிக்கு போன் செய்வார். இப்போது வெளியே வர முயற்சி செய் எனக் கூறி மீண்டும் 40 நிமிடம் காரை ஓட்டிச் சென்று அஞ்சலி வீட்டுக்குச் செல்வார் சச்சின். செல்போன் இல்லாத காலத்தில் காதலிப்பது தான் எவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது!

Story image

1993-ல் அஞ்சலி, அவருடைய தந்தை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மணி ரத்னம் இயக்கிய ரோஜா படம் பார்க்கச் சென்றிருக்கிறார் சச்சின். விக், ஒட்டு மீசையுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அடையாளத்தை மறைத்தபடி திரையரங்குக்குச் சென்றார். இடைவேளையின்போது சச்சினின் கண்ணாடி கீழே விழுந்தது. பிறகு ஒட்டு மீசையும் கழன்றுவிட, உடனே சச்சினை அடையாளம் கண்டு ரசிகர்கள் சூழ்ந்துள்ளார்கள். வேறுவழியின்றி பாதிப் படத்தில் திரையரங்கிலிருந்து சச்சினும் அஞ்சலியும் வெளியேறினார்கள். 

Story image

அப்போது மொபைல் போன் இல்லாததால் கடிதப் போக்குவரத்து அதிகமாக இருந்திருக்கிறது. சச்சின் எப்போதும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதற்கேற்றபடி இந்தத் தேதியில் சச்சின் எங்கு இருப்பார் என்று திட்டமிட்டு, அங்குக் கடிதத்தை அனுப்புவார் அஞ்சலி. அக்கடிதங்களை இன்னமும் பாதுகாப்பதாகக் கூறுகிறார் சச்சின். 

Story image

1992 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அஞ்சலி வீட்டுக்குச் சென்றார் சச்சின். இதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். சச்சினின் சகோதரர் அஜித்தைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அஞ்சலி. அந்த சந்திப்பின் முடிவில், இவர்தான் சச்சினுக்குச் சரியான ஜோடி என அஜித்தும் முடிவெடுக்க, திருமணம் ஏற்பாடானது. 

1994 ஏப்ரலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரு வருடம் கழித்து 1995, மே 25 அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அஞ்சலி மேத்தா, அஞ்சலி டெண்டுல்கர் ஆனார். 

Story image

எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு, அடுத்ததாக எம்.டி. படிக்க முடிவெடுத்தார் அஞ்சலி. ஆனால் சச்சினுக்குத் துணையாக இருப்பதற்காக மருத்துவம் பார்ப்பதை, மேல்படிப்பில் ஈடுபடுவதைக் கைவிட்டார். 

இது மிகப்பெரிய தியாகம். இதனால் தான் என்னால் கிரிக்கெட்டில் நிம்மதியாக ஈடுபட முடிந்தது எனத் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார் சச்சின். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.