இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விராட் கோலிக்கு எப்போது ஆக்ரோஷமாக விளையாட வேண்டும், எப்போது ஆட்டத்தில் நிதானம் காட்ட வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அவர் களத்தில் நின்று ரன்களை சேர்த்து விளையாடுவது அணிக்கு பலம். 50 ஓவர் போட்டிகளில் அவர் ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரர். அவரது சாதனைகளே அதற்கு சான்றாகும். அவரது சிறப்பான ஆட்டத்தினை பல தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது கிரிக்கெட் வலைப்பயிற்சியின் தீவிரம் மட்டும் குறையவில்லை. அவர் ஒவ்வொரு முறை பயிற்சியில் ஈடுபடும் போதும் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். அவர் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.