போல்ட் விலகல், கிராண்ட்ஹோமின் ஓய்வு அறிவிப்பு: நியூசி. கிரிக்கெட் வாரியம் என்ன சொல்கிறது?
அனைத்து வீரர்களும் மொத்தமாக ஒரே நேரத்தில் டி20 லீக் பக்கம் சென்று விடுவார்கள் என...


பிரபல வீரர் கிராண்ட்ஹோம் இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில் தான் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் பிபிஎல் போட்டிக்காக அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு கிராண்ட்ஹோம் தேர்வானார். அப்போது, தங்களிடம் இதுகுறித்து அனுமதி எதுவும் பெறவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கிராண்ட்ஹோம்.
கிரிக்கெட் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகினார். 33 வயது டிரெண்ட் போல்ட், நியூசிலாந்து அணிக்காக 78 டெஸ்டுகள், 93 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பணிச்சுமை, குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் போன்ற காரணங்களால் தன்னை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார் போல்ட். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்தது. இந்த முடிவால் டி20 லீக் போட்டிகளில் டிரெண்ட் போல்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில் தான் நியூசிலாந்து வீரர்கள் அதிகமாக விருப்பப்படுகிறார்களா, அதற்கான அறிகுறிதான் கிராண்ட்ஹோமின் ஓய்வு அறிவிப்பா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர் பிரையன் ஸ்டிரோனாச் கூறியதாவது:
அனைத்து வீரர்களும் மொத்தமாக ஒரே நேரத்தில் டி20 லீக் பக்கம் சென்று விடுவார்கள் என நான் நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் நிலவும் சூழலின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்கள் விளையாடினாலும் நாட்டுக்காகவும் அவர்கள் விளையாடுவார்கள். எனினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அணுகுமுறை கொண்டிருப்பார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். சம்பளம் தொடர்பாக எங்களால் போட்டி போட முடியாது. அது எங்களுடைய சாதகமான அம்சம் கிடையாது. அதனால் தான் எங்களுடைய வீரர்களை ஐபிஎல் மற்றும் இதர டி20 லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...