டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விராட் கோலியின் ரன் அவுட்டால் மாறிப் போன நிலைமை: முதல் நாளில் இந்தியா 233/6

நாளைய ஆட்டமும் டெஸ்ட் காதலர்களுக்கு மகத்தானதாகவே அமையும் என எதிர்பார்ப்போம்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

ச. ந. கண்ணன்

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகளை டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த வகை கிரிக்கெட்டிலாவது காண முடியுமா? பேட்ஸ்மேன்களுக்கு நொடிக்கு நொடி அவர்கள் சவால் அளிக்கும்போது அது பார்வையாளர்களுக்குப் பரவசத்தை அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் 100 ஆண்டு வாழ வேண்டும் என்பதற்குச் சாட்சியாக அமைந்தது இன்றைய தினம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 89 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

பிரித்வி ஷா மீது மிகவும் நம்பிக்கை வைத்து இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பளித்தார் கோலி. எனினும் முதல் ஓவரிலேயே 2 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா.

இதனால் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மயங்க் அகர்வாலுக்கும் புஜாராவுக்கும் ஏற்பட்டது. நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் ரோபோ போல துல்லியமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கை அப்படியே தொடரவிட்டார்கள்.

40 பந்துகள் வரை எதிர்கொண்ட மயங்க் அகர்வால், கம்மின்ஸின் அற்புதமான பந்தில் போல்ட் ஆனார். ஆடுகளத்தில் ஸ்விங் பெரிதாக இல்லாததால் பந்தை நன்கு பிட்ச் செய்து சீம் மூவ்மெண்ட் கிடைக்க முயன்று அதில் வெற்றி பெற்றார் கம்மின்ஸ். தன்னால் இயன்ற அளவு போராடினார் மயங்க் அகர்வால்.

அடிலெய்ட் ஆடுகளம் என்றால் கோலிக்கு மிகவும் இஷ்டம். நான்கு டெஸ்டுகளில் 431 ரன்கள், 4 சதங்கள் எடுத்துள்ளார். புதிய பந்தில் இரு விக்கெட்டுகள் பறிபோனதால் முதல் பகுதி நிறைவடையும் வரை வேறு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு புஜாராவுக்கும் கோலிக்கும் ஏற்பட்டது. ஐபிஎல், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் ஆடாமல் போனால் ஆஸ்திரேலியாவில் கடந்த முறை விட்ட இடத்திலிருந்து புஜாரா தொடர்வது போல அவருடைய ஆட்டம் அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்று ஒரு வீரர் இனிமேல் நமக்குக் கிடைப்பாரா?

அசத்திய ஸ்டார்க்

அசத்திய ஸ்டார்க்

முதல் டெஸ்டின் முதல் பகுதியில் இந்திய அணி, 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது. புஜாரா 88 பந்துகளில் 17 ரன்கள், கோலி 22 பந்துகளில் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

கடந்த சில மாதங்களாக ஐபிஎல், ஒருநாள், டி20 தொடர்களையே பார்த்து வந்த நமக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் புஜாராவும் காண்பித்து விட்டார்கள். 

2006-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்டில் முதல் பகுதியில் குறைவாக ரன்கள் எடுத்திருப்பது இப்போதுதான் (2006-ல் 15.4 ஓவர்களில் இங்கிலாந்து 36/1 ரன்கள் எடுத்தது). டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமானது என்பதை டெஸ்ட் தொடரின் முதல் பகுதியிலேயே நிரூபித்துவிட்டார்கள் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள்.

முதல் பகுதிக்குப் பிறகு லயன் பந்துவீச்சில் கிரீஸை விட்டு மேலேறி ரன்கள் எடுக்க முயன்றார் புஜாரா. கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது புஜாராவின் இந்த உத்தி மிகவும் பலன் அளித்தது. லயன் பந்துகளை 406 முறை எதிர்கொண்டதில் 161 முறை மேலேறி வந்து விளையாடியுள்ளார். அதே உத்தியை இன்றும் நன்குப் பயன்படுத்தினார் புஜாரா.

கோலி 16 ரன்களில் இருந்தபோது லயன் வீசிய பந்து கையுறையில் பட்டது போல தென்பட்டது. எனினும் இதற்கு டிஆர்எஸ் கோரவில்லை பெயின். கோலி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தினார். லயனின் 9-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் புஜாரா. எனினும் அவருடைய அடுத்த ஓவரில் லபுசானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா. 160 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்கள் எடுத்தார்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 55 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 39, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

முதல் நாள் ஆட்டத்தில் விளக்கொளியில் விளையாட வேண்டிய சவாலான மூன்றாம் பகுதியை இந்திய அணி எப்படிச் சமாளிக்கப் போகிறது? நினைத்தது போல ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதற்கு வழிவகுத்தது ஒரு ரன் அவுட்.

2-ம் பகுதியில் 30 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 66 ரன்கள் எடுத்தது இந்திய அணி. தேநீர் இடைவேளைக்குப் பிறகு நம்பிக்கையுடன் விளையாடினார்கள் கோலியும் ரஹானேவும்.

123 பந்துகளில் அரை சதமெடுத்தார் கோலி. இது அவருடைய 23-வது டெஸ்ட் அரை சதம். இதற்கு முன்பு தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 467 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு மைதானத்தில் கோலி எடுத்த அதிக டெஸ்ட் ரன்கள். இந்த அரை சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதிக ரன்களை அடிலெய்ட் மைதானத்தில் எடுத்துள்ளார். 

எனினும் முதல் நாளின் கடைசிப் பகுதியில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. நன்கு ஆடி வந்த கோலி, ரஹானேவின் தவறான அழைப்பால் 74 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ரன் அவுட் ஆன கோலி

ரன் அவுட் ஆன கோலி

அடிலெய்டில் கோலியின் ரன்கள்:

116, 22, 115, 141, 3, 34, 74.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை ரன் அவுட் ஆகியுள்ளார். இரண்டுமே அடிலெய்டில் நிகழ்ந்துள்ளது. மேலும் அடிலெய்டில் முதல்முறையாக அரை சதமெடுத்து சதமடிக்காமல் திரும்பியுள்ளார் கோலி. 

கோலியை ரன் அவுட் செய்ததால் மனத்தளவில் பாதிப்புக்கு ஆளான ரஹானே, 42 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஹாரி, 16 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பதற்றமானார்கள்.

எனினும் கடைசி 5.4 ஓவர்களை அஸ்வினும் சஹாவும் நன்கு எதிர்கொண்டு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி, 89 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் நாளில் இந்திய அணிக்குக் கடும் சவாலாக விளங்கினார்கள் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள். முதல் இன்னிங்ஸில் 275 ரன்களையாவது எடுக்க வேண்டும் என்பது இந்திய அணியின் முதல் விருப்பமாக இருக்கும். 250 ரன்களுக்குள் சுருட்ட ஆஸி. பந்துவீச்சாளர்கள் எண்ணுவார்கள். நாளைய ஆட்டமும் டெஸ்ட் காதலர்களுக்கு மகத்தானதாகவே அமையும் என எதிர்பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.