ஒரே தொடரில் உலக சாதனைகள்!
உலகம் முழுவதும் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டுவரும் விளையாட்டு கிரிக்கெட் என்றால் அதில் சந்தேகம் இல்லை.


உலகம் முழுவதும் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டுவரும் விளையாட்டு கிரிக்கெட் என்றால் அதில் சந்தேகம் இல்லை.
ஆரம்ப காலங்களில் டெஸ்ட் வடிவில் இருந்த கிரிக்கெட்டில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட், 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் என பலவித மாற்றங்களை சந்தித்துள்ளன. ஏன் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் கூட வந்துவிட்டது.
இவற்றில், பல சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன.
விளையாட்டில் அனுபவமும், நுணுக்கங்களும் தெரிந்திருந்தால்தான் சாதனைகளைப் படைக்க முடியும்.
இதில் தனிநபர் சாதனைகளும், அணியாக இணைந்து நிகழ்த்தும் சாதனைகளும் வரலாற்றில் அழியாத முத்திரையாக பதியப்படும்.
ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் பதிவு செய்தல், அதிக ஸ்கோர் பதிவு செய்த எதிரணியின் இலக்கை விரட்டி வெற்றி பெறுதல், தொடர்ச்சியாக பல வெற்றிகளை ஈட்டுதல் என அணியின் சாதனைகளில் பல வகை உண்டு.
அதில், ஒரு நாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த அணி என்ற சாதனையை அண்மையில் படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் மே.இ.தீவுகள் அணி, முதலாவது ஆட்டத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
அந்த ஆட்டத்தில் மொத்தம் 23 சிக்ஸர்களை மே.இ.தீவுகள் அணி விளாசியிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் சிக்ஸர் மன்னரான கிறிஸ் கெயில் 12 சிக்ஸர்களை விளாசினார். அந்த அணியின் மற்ற வீரர்களான டேரன் பிராவோ 4 சிக்ஸர்கள், ஆஷ்லே நர்ஸ் 3 சிக்ஸர்கள், ஜான் கேம்ப்பெல், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர், தேவேந்திர பிஷு ஆகியோர் தலா 1 சிக்ஸரை பறக்கவிட்டனர்.
ஒரு நாள் ஆட்டத்தில் 22 சிக்ஸர்களைப் பதிவு செய்து, அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை தன் வசம் வைத்திருந்த நியூஸிலாந்தின் சாதனையை முறியடித்திருந்தது மே.இ.தீவுகள்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில்தான் 22 சிக்ஸர்களை நியூஸிலாந்து பதிவு செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 21 சிக்ஸர்களை பதிவு செய்து நியூஸிலாந்தின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்தது இங்கிலாந்து அணி என்பது வியப்பளிக்கும் மற்றொரு செய்தி. (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு (2018) ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில்தான் இந்தச் சாதனையை இங்கிலாந்து பதிவு செய்ய முயற்சித்தது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதிவு செய்த (481/6) ரன்களே இதுவரை ஒரு நாள் ஆட்டத்தில் ஓர் அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது என்பது கூடுதல் தகவல்).
இந்நிலையில், மே.இ.தீவுகள்-இங்கிலாந்து மோதிய 4ஆவது ஒரு நாள் ஆட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டவ் 4 சிக்ஸர்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 2 சிக்ஸர்களும் விளாசினர்.
இவர்கள் ஆட்டமிழந்த பிறகு களம் புகுந்த கேப்டன் இயான் மார்கன் (6 சிக்ஸர்கள்), விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் (12 சிக்ஸர்கள்) விளாசினர்.
இதன்மூலம், 50 ஓவர் கொண்ட ஓர் ஆட்டத்தில் 24 சிக்ஸர்களை பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது இங்கிலாந்து. மே.இ.தீவுகள் செய்த சாதனையை அதே தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாடியே முறியடித்தது இங்கிலாந்து!
இந்த ஆட்டத்தில் இயான் மார்கன் 88 பந்துகளில் 103 ரன்களும், ஜாஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களும் பதிவு செய்தனர்.
50 ஓவர்கள் முடிவில் 418 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இரண்டாவது விளையாடிய மே.இ.தீவுகள் அணியின் வீரர்கள் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
கிறிஸ் கெயில் மட்டும் 14 சிக்ஸர்களை விளாசினார். ஒட்டுமொத்தமாக மே.இ.தீவுகள் அணி 22 சிக்ஸர்களை விளாசிய போதிலும் முதலாவது ஒரு நாள் ஆட்டத்தை போல, இந்த ஆட்டத்திலும் மே.இ.தீவுகள் அணி தோல்வி அடைந்தது.
முதலாவது ஆட்டத்தில் உலக சாதனை புரிந்த மே.இ.தீவுகள் அணியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை என்பதே சோகம். வீறுகொண்டு எழுந்த இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள் ஆகிய அணிகளை பட்டியலில் இருந்து கீழிறக்கி ஒரு நாள் ஆட்டத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை உச்சி முகர்ந்தது!
இன்னொரு உலக சாதனையும் இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்டன. 4ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 46 சிக்ஸர்களை அடித்துள்ளன. இதுவும் ஒரு சாதனையாகும்.
இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடிய ஒரு நாள் ஆட்டத்தில் 38 சிக்ஸர்கள் பதிவு செய்ததே சாதனையாக இருந்தது.
தனிநபர் சாதனையும் இங்கே அரங்கேறியது. டெஸ்ட், டி20, ஒருநாள் ஆட்டங்களை சேர்த்து அதிக சிக்ஸர்கள் (506) விளாசிய வீரர் என்ற சாதனையையும் கிறிஸ் கெயில் பதிவு செய்தார்.
எந்தவொரு சாதனைகளும் முறியடிக்கப்பட கூடியவையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரே தொடரில் இரண்டு உலக சாதனைகள் என்பதே அரிதான நிகழ்வாக இருந்தாலும், ஆச்சரியங்களும், வியப்புகளும் நிறைந்த கிரிக்கெட்டில், இங்கிலாந்தின் சாதனையை நாளை மற்றொரு அணி முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...