மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தில்: இந்திய வீரர்களின் சாதனைகள்!
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த இந்தியா, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த இந்தியா, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 3 டி20 ஆட்டம் கொண்ட தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு ஆட்டங்கள் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், மூன்றாவது ஆட்டம் கடந்த புதன்கிழமை கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மே.இ.தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அமைதியாக பல சாதனைகளை புரிந்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்.
சிக்ஸர் மன்னரான ரோஹித்!
21 அரை சதங்களுடன் (88 இன்னிங்ஸ்) இந்திய அணியின் ரோஹித் சர்மாவும் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சாதனையை அவர் இந்த தொடரின் 2ஆவது ஆட்டத்திலேயே (கோலிக்கு முன்பே) படைத்துவிட்டார். குறைந்த இன்னிங்ஸில் இந்தச் சாதனையை எட்டியவர் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியலில் கோலி முன்னிலையில் உள்ளார். 3ஆவது இடத்தில் 16 அரை சதங்களுடன் (74 இன்னிங்ஸ்) நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்டில் உள்ளார்.
மற்றொரு சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 107 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிக சிக்ஸர்களை பதிவு செய்த மே.இ.தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (105) சாதனையை முறியடித்தார் ரோஹித். இந்தப் பட்டியலில் மார்டின் கப்டில் 103 சிக்ஸர்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த தீபக் சாஹர்..!
கடைசி டி20 ஆட்டத்தில் இடம்பிடித்த இந்திய பந்துவீச்சாளர் தீபக் சாஹர், 3 ஓவர்கள் வீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 1.33 எக்கானமி ரேட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் தீபக். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் இவர் தட்டிச் சென்றார். மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 ஆட்டங்களில் 1 எக்கானமி ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளார் மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார்.
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனி செய்த ஒரு சாதனையை இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்தில் கோலியுடன் சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார் பந்த். மேலும், அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அவர் அமைந்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்த ஆட்டத்தில் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார் பந்த். விக்கெட் கீப்பிங் இடத்தை மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் பூர்த்தி செய்துவரும் பந்த், டி20 ஆட்டத்தில் ஒரு அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக தோனி எடுத்திருந்த அதிகபட்ச ஸ்கோரை இந்த ஆட்டத்தில் முறியடித்தார். பெங்களூரில் கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தோனி 56 ரன்கள் எடுத்ததே டி20 ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
தொடர்ந்து 4ஆவது முறையாக 3-0
கடந்த 2016ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. 2017 மற்றும் 2018இல், ரோஹித் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. மே.இ.தீவுகள் அணியுடனான 6 டி20 ஆட்டங்களில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது.
இந்திய வீரர்களின் சாதனைகளும், அணியின் வெற்றியும் தொடரட்டும்.
அதிக அரை சதம் பதிவு செய்த கோலி!
ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு சாதனையைப் படைத்துவிடுவார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அந்த வகையில் இந்தத் தொடரிலும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் 19 ரன்களை மட்டுமே எடுத்த கோலி, அடுத்த ஆட்டத்தில் 28 ரன்களை எடுத்தார். மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 15.1ஆவது ஓவரில் பவுண்டரியை விரட்டி, டி20 போட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களில் (65 இன்னிங்ஸ்) விளையாடி 21ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார் கோலி.
2010ஆம் ஆண்டு டி20இல் அறிமுகமான கோலி, 9 ஆண்டுகளில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...