ஐசிசி தலைவராக ஜூன் 2018 வரை நீடிக்க சஷாங்க் மனோகர் முடிவு!
தனது பதவிக்காலமான ஜூன் 2018 வரை ஐசிசி தலைவராக நீடிக்க மனோகர் முடிவெடுத்துள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் சஷாங்க் மனோகர் தனது பதவியைக் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகாலம் கொண்ட இந்தப் பதவியிலிருந்து 8 மாதங்களிலேயே விலகியதால் ஐசிசி வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் தற்போது அவர் மனம் மாறியுள்ளார். தனது பதவிக்காலமான ஜூன் 2018 வரை ஐசிசி தலைவராக நீடிக்க மனோகர் முடிவெடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016-ம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகி இரண்டு நாள்களில் அவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சஷாங்க் மனோகர், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். 59 வயதான சஷாங்க் மனோகர், தனது ராஜிநாமா கடிதத்தை இ-மெயில் மூலம் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பினார். அதில், ’நான் ஐசிசியின் முதல் சுதந்திரமான சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவன்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்தேன். பல்வேறு விவகாரங்களில் முடிவெடுப்பதில் நியாயமாகவும், நடுநிலையாகவும் செயல்பட முயற்சித்தேன். அந்த நேரங்களில் அனைத்து வாரியங்களின் இயக்குநர்களும் எனக்கு ஆதரவளித்தனர். தனிப்பட்ட காரணங்களால் ஐசிசி சேர்மன் பதவியில் என்னால் தொடர இயலவில்லை. அதனால் உடனடியாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன் . இந்த நேரத்தில் அனைத்து வாரியங்களின் இயக்குநர்கள், ஐசிசி அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் ஐசிசி இன்னும் பெரிய அளவுக்கு உயர வாழ்த்துகள்' என குறிப்பிட்டார். பிறகு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை ஐசிசி தலைவராக நீடிக்க சஷாங்க் மனோகர் ஒப்புக்கொண்டார்.
ஐசிசி வருவாயில் பெரும்பகுதியை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பகிர்ந்து கொண்டன. இந்த முறையை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் புதிய திருத்தங்கள் மற்றும் நிதிக் கொள்கையை சஷாங்க் மனோகர் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் ஏப்ரலில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
ஐசிசியின் நிர்வாகிகள் குழு கூட்டம் துபையில் நடைபெற்றது. அதில், ஐசிசியின் நிர்வாக அமைப்பு மற்றும் வருமானப் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரும் முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது, 10-இல் 9 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. பிசிசிஐ மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது.
அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பில் 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவாக வாக்களித்தன. பிசிசிஐ மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருந்தன.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஐசிசிக்கு வெற்றி கிடைத்தது. ஐசிசியின் இந்த மறுசீரமைப்பு முறைகளுக்கு, குறிப்பாக வருவாய் பகிர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) இது மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் தன் பதவிக்காலம் முடியும்வரை வரை ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் நீடிக்க உள்ளார். நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஐசிசிக்கு வெற்றி கிடைத்ததால் மனோகரே ஐசிசி தலைவராக நீடிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது பதவிக்காலமான ஜூன் 2018 வரை ஐசிசி தலைவராக நீடிக்க மனோகர் முடிவெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...