தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது, விவாதத்துக்குரிய விஷயம் என்றாலும் ‘வரலாறு காணாத வாக்குப் பதிவு சதவிகிதம்’ என்ற பெருமையுடன்.
இந்தத் தேர்தல் கால விளம்பர – பிரசார களேபரங்களுக்கு இடையே இந்தியப் பொருளாதாரம் ஆறாவது இடத்துக்கு வீழ்ந்துவிட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை; செய்தியும் அமிழ்ந்துவிட்டது.
கடந்த ஆண்டில்தான் நாலாவது இடத்தைத் தொட்டது; தொடர்ந்து மூன்றாவது இடம், அடுத்தடுத்து முன்னேறுவோம் என்று பெருமை பொங்க அரசுகளும் அரசியல் தலைவர்களும் அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த வாரத்தில் வெளியான பன்னாட்டு நிதியத்தின் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகள்தான் இந்த இறக்கத்தை அறிவித்திருக்கின்றன. நமக்கு முன்னுள்ள ஐந்து நாடுகள் – அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன். ஆனால், இதுபற்றிப் பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. மேற்கு வங்கமும் தமிழ்நாடும்தான் பிஸியாக இருந்த விஷயங்கள்.
தேர்தல் எதுவும் நடைபெறாமலேயே மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை நோக்கி வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கொத்தாக 7 எம்.பி.க்கள் பாரதிய ஜனதாவில் இணைந்துவிட்டனர். 244 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 145. மூன்றில் இரு பங்கு 163. இன்னும் 18 உறுப்பினர்கள் மட்டுமே தேவை. இந்த பலம் கிடைத்தால் எத்தகைய சட்ட முன்வரைவையும் எளிதில் ஆளும் கூட்டணியால் நிறைவேற்ற முடியும். மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மை மட்டுமே பெற்றிருக்கிறது.
அரசியல் சாசன வழிமுறைகளின் கீழ், ‘நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தைக்காக’ எனக் குற்றம் சாட்டி, இந்தியாவின் தேர்தல்களையெல்லாம் நடத்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையின் 73 உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதைப் போல, தலைமைத் தேர்தல் ஆணையரையும் நீக்க வகை செய்யும் சட்டப்பிரிவு 324 (5)-ன் கீழ் மாநிலங்களவைத் தலைவருக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பாக 9 குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, இரு அவைகளிலும் இதே போன்றதொரு பதவி நீக்க நோட்டீஸை அவைத் தலைவர்கள் நிராகரித்த நிலையில் புதிதாக மீண்டும் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்தத் தீர்மானத்தின் மீது விவாதிக்கப்படலாமே அல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. ஏனென்றால், பெரும்பான்மை இருந்தால் அரசோ, அரசுக்கு ஆதரவாகவோ எதை வேண்டுமானாலும், என்னதான் எதிர்க்கட்சிகள் திரண்டு எதிர்ப்புக் காட்டினாலும், நிராகரித்துவிடவும் முடியும்; நிறைவேற்றிவிடவும் முடியும்.
தொடர்ந்து சர்ச்சைப் புயலுக்குள்ளேயே இருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். தேர்தல் வந்ததும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு உயர் அலுவலர்களைத் தேர்தல் ஆணையம் இடம் மாற்றுவது வழக்கமானதே. தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலரில் தொடங்கிக் காவல்துறைத் தலைவர்கள் வரையிலும் இடம் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், மேற்கு வங்கத்தில் வாக்குப் பதிவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800 ‘விஷமிகளை’க் கைது செய்யுமாறு சில நாள்கள் முன் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், இந்த உத்தரவைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துவிட்டது.
இவ்வாறு கைது செய்யும் உத்தரவைப் பிறப்பிப்பதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் நீதிமன்றம் சென்றது. இந்த 800 பேர் பட்டியலில் கவுன்சிலர்கள், உள்ளாட்சிகள், நகராட்சிகளின் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாரும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தேர்தலும் பணமும் பிரிக்க முடியாததாகிவிட்டது. வாக்குப் பதிவுக்கு முன் தேர்தலில் வாக்குகளுக்காக வாக்காளர்களுக்குப் பணம் தருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. ரூபாய் ஐநூறு, ஆயிரங்களில் தொடங்கி பத்தாயிரம், சில தொகுதிகளில் அதைவிடவும் கூடுதலான தொகை சொல்லப்படுகிறது. நம்ப முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. பணம் வழங்குவதில் கட்சி பேதங்கள் எதுவுமில்லை. இல்லாததால் சில கட்சிகள் பணம் தரவில்லை; இருந்தாலும் சில கட்சிகள் தரவில்லை. ஆனால், பரவலாக வாக்காளர்களிடையே பணத்துக்கான எதிர்பார்ப்பு இருந்ததென்னவோ உண்மை. யாரையும் குறை சொல்ல முடியாது; கூடவும் கூடாது.
கட்டுக்கட்டான பணம் இல்லாவிட்டால் இனிமேல் அரசியலே இல்லைபோல. தொகுதிக்கு ஒரு வாக்கிற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் என்றால் எத்தனை தொகுதிகள்? எத்தனை ஆயிரம் கோடிகள்? இது வாக்காளர்களுக்கு.
ஒருகாலத்தில் சொந்தச் செலவில் டீ குடித்து தேர்தல் வேலை பார்த்தவர்கள் இருக்கிறார்கள்; இப்போது காட்சி மாறிவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான கட்சிகளில் பணம் இல்லாவிட்டால் அணுவும் அசையாது; தொண்டர்களும் நகர மாட்டார்கள் என்கிறார் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர்.
வாக்குப் பதிவுக்குப் பின், ஆட்சி அமைந்ததும் பணம் தருவதாகப் பெரும்பாலான கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதிகளாக அறிவித்திருக்கின்றன. மகளிருக்கான உரிமைத் தொகை ஆயிரத்தை இரண்டாயிரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது திமுக. மாதம் ரூபாய் இரண்டாயிரத்துடன் உடனடி உதவித்தொகையாக ரூ. 10 ஆயிரம் தருவதாக அதிமுக தெரிவித்துள்ளது. த.வெ.க.வோ மாதம் ரூ. 2,500 மகளிருக்குத் தருவதாகவும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் மாதம் ரூ. 4 ஆயிரம் என்றும் அறிவித்திருக்கிறது. ஆனால், எல்லா காலத்திலும் வாங்கும் நிலையில்தான் வாக்காளர்கள் அல்லது மக்கள் இருக்கிறார்கள்.
இருக்கிற பிரச்சினைகளைப் பார்த்தால், சொல்லிவைத்தாற்போல சுங்கச் சாவடி (டோல் கேட்) கட்டணங்கள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எந்த வாகனம் வாங்கினாலும், வாங்கும்போதே ஒவ்வொன்றுக்கும் உரிய சாலை வரி செலுத்தப்பட்டு விடுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் நெடுஞ்சாலைகளில் செல்லும்போதும் வழிநெடுக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுதான் கொண்டிருக்கின்றன. இதற்கொரு முடிவிருப்பதாகவே தெரியவில்லை. இதற்காக என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படுகின்றன – மக்களுக்குச் சாலை வசதி செய்துதர வேண்டியது அரசின் கடமைதானே. ஒருவர் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை காரில் சென்றுவந்தால் என்ன செலவாகும்? ஆயிரங்களில், நுகர்வோர் நொந்து நூலாகிறார்கள்.
இன்னமும் மாதந்தோறும் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வேண்டாம் என்று சொல்லவோ, வெளியில் வாங்கிக் கொள்ளும் நிலையிலோ பெரும்பான்மையான மக்கள் இல்லை. இடைப்பட்ட காலத்தில் யார் வேண்டுமானாலும் தங்கள் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக் கொண்டுவிடலாம் என்றவோர் அறிவிப்பின் தொடர்ச்சியாக இப்போது மேலும் பலர் அரிசிக்கான வரிசையில்.
குடியின் மூலம் குடிகள் கெடுகின்றன; மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டங்களால் எவ்விதப் பயனும் இல்லை. குடிப் பழக்கத்தால் பல்லாயிரம் குடும்பங்கள் தங்கள் வாழ்வை இழந்துகொண்டிருக்கின்றன. பெண்கள் தங்கள் தந்தையை, கணவனை, அண்ணனை, தம்பியை இழந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், இனி மதுக்கடைகளை மூடவியலாது. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் அரசே நடந்துகொண்டிருக்கிறது என்று ‘பெருமை’யாகவும் இன்னொரு பக்கம் பறை சாற்றப்படுகிறது.
எந்த வரன்முறையும் வரையறையும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. ஒரு காலத்தில் விலைவாசி உயர்வால் ஆட்சி மாற்றங்களேகூட நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அதிசயமாக இந்தத் தேர்தலில் விலைவாசி உயர்வு பற்றிப் பெரிதாகப் பேசவில்லை; கேட்கவுமில்லை (அரிசி விலையெல்லாம் எங்கோ போய்விட்டது, நியாயவிலைக் கடை இருக்கிறதோ, தப்பித்தோமோ?)
இப்படியொரு சூழலில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னும் சரி, ஆட்சியமைந்த பின்னும் சரி, எத்தனை ஆயிரம் ரூபாய்கள் கொடுத்தாலும் யாருக்கு என்ன உருப்படியான பலன் ஏற்பட்டுவிடும்? எப்படியும் பாதிக்கும் மேற்பட்ட தொகை மீண்டும் மதுக்கடைகளின் வழி சென்றுவிடப் போகிறது.
அனல் பறந்த தேர்தல் பிரசாரமும் தொடர்ந்து அமைதியான வாக்குப் பதிவும் முடிந்துவிட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஓய்வுக்குச் சென்றுவிட்டார்கள், அவரவர் லெவலில். மக்கள் எல்லாரும் வழக்கமான தங்கள் பிழைப்புடன் அடைமழை விட்டும் செடிமழை விடாததைப் போல தேர்தலைப் பற்றியும் முடிவைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வாக்குப் பதிவு முடிந்த கையுடன் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு எப்படியிருக்கும்? யாருக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கும்? எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? யார் ஆட்சி அமைப்பார்கள்? யார் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பார்கள்? என்றெல்லாம் ஓயாத அலைகளென விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஒட்டுமொத்தமும் குழப்பம், கணிக்கவே முடியாத வகையில் வாக்காளர்கள் வந்து வாக்களித்திருக்கின்றனர். நிறைய முதல் முறை வாக்காளர்கள் என ஏராளமான கருத்துப் பரவல்கள். இல்லை, எல்லாம் வழக்கம்போலதான், வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரிக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தமும் ஒரு காரணம் என்ற வாதிடல்கள்.
கடந்த முறை ‘லக்கி பிரைஸாக’ ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு மகளிருக்கு நகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்துக்கு வழிசெய்தது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு (இத்தனைக்கும் கடுமையான நஷ்டத்தில்தான் அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன). இந்த முறை யார் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எந்திரங்களுக்குள் முடிவு என்ற பூதம் உறங்கிக் கொண்டிருக்கிறது. வாக்குகள் எண்ணி முடிந்த பிறகுதான் தெரியும் என்ன செய்யப் போகிறதென; அதுவரை எல்லாருமாக எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி.
இவ்வளவுக்குப் பிறகும் திருவாளர் பொதுஜனத்துக்குத் தேர்தலுக்கு முன்னிருந்த பிரச்சினைகள் எல்லாமும் தேர்தல் முடிவுக்குப் பின்னும் சந்தேகமின்றித் தொடரத்தான் செய்யும்; ம். அவரவர் பிரச்சினைகள், அவரவர் பாடுகள்.
Summary
While waiting for the election results, regarding election politics and people issues...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

அதிமுக தவறு செய்கிறது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



