மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

டெஸ்ட்: புஜாரா சூப்பர் சதம்! ஆஸி. ஸ்கோரை நெருங்கும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் புஜாரா அற்புதமாக விளையாடி சதமெடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:15 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் புஜாரா அற்புதமாக விளையாடி சதமெடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 185 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்தபோது மிகவும் கவனமாக ஆடிய முரளி விஜய் அரை சதம் எடுத்தார். 129 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் அவர் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

விஜய் - புஜாரா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி 100 ரன்கள் வரை சேர்த்தார்கள். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸ்டம்பிங் ஆகி 82 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். சதமடிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 73 ரன்கள் சேர்த்துள்ளது. 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 70.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. புஜாரா 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் அவுட் ஆனபின்பு ஆடவந்தார் கோலி.

உணவு இடைவேளைக்குப் பிறகு, 155 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் புஜாரா. இந்த டெஸ்டிலாவது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.
கோலி சென்றபிறகு ரஹானே களத்துக்குள் வந்தார். மீண்டும் இன்னொரு புஜாரா - ரஹானே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்பியபோதும் புஜாரா கவனமாக ஆடிவந்தார். 214 பந்துகளில் சதம் எடுத்து அசத்தினார் புஜாரா. இதில் 14 பவுண்டரிகள்.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 109, நாயர் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்றைய நாளின் முடிவில் ஆஸி.-யின் ஸ்கோரை இந்தியா எட்டிவிடுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.