டெஸ்ட் அணியில் கருண் நாயரை வெளியேற்றும் ரோஹித் சர்மா!
முச்சதம் எடுத்த கருண் நாயர் அதன்பிறகு மிகச் சுமாராகவே விளையாடிவருகிறார்...


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடிவிட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை விராட் கோலியும் பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா நல்லபடியாகப் பங்கேற்கவேண்டும் என்பதற்காக அவரைப் பாதுகாக்கப்படும் நோக்கில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கை டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பிடிப்பது உறுதியாகிறது. சென்னை டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் எடுத்த கருண் நாயர் அதன்பிறகு மிகச் சுமாராகவே விளையாடிவருகிறார். முச்சதத்துக்குப் பிறகு 26, 0, 23, 5 என்றே ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் 6 அல்லது 7-வது வீரராக அஸ்வின் களமிறங்குவதால் கருண் நாயர் அல்லது ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் கிடைக்கும். சிலசமயம் இருவருக்கும் இடம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. இந்த நிலையில் கருண் நாயர் இந்திய அணியில் தேர்வாகாமல் போகவும் வாய்ப்புண்டு.
கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா மூன்று டெஸ்டுகளிலும் தலா அரை சதம் எடுத்துள்ளார். இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.
மே.இ. தொடர் ஜுலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டெஸ்டுகள், 5 ஒருநாள், ஒரு டி20 கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கண்டியில் ஜுலை 26 அன்று தொடங்குகிறது. செப்டம்பர் 6 அன்று நடைபெறும் டி20 போட்டியுடன் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...