/

அரையிறுதிக்கு முன்னேறுமா ஆஸி.?

எக்பாஸ்டனில் சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:43 pm

DIN

எக்பாஸ்டனில் சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உற்சாகமாக விளையாடும். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கோ இது வாழ்வா, சாவா ஆட்டமாகும்.
அந்த அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. எனவே இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். கடந்த இரு ஆட்டங்களிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்திலும் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் லியாம் பிளங்கெட், ஜேக் பால், மார்க் உட் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித், மொயீன் அலி கூட்டணியும் பலம் சேர்க்கிறது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மழை காரணமாக பெரிய அளவில் பேட் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு மட்டுமே ஓரளவு பேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் கூட்டணி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.
இதுவரை...: சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகளும் 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளைப் பெற்றுள்ளன.

Story image


இங்கிலாந்து (உத்தேச லெவன்): ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஆதில் ரஷித், லியாம் பிளங்கெட், ஜேக் பால், மார்க் உட்.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மோசஸ் ஹென்ரிக்ஸ், கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேஸில்வுட்.


போட்டி நேரம்: பிற்பகல் 3
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


மிரட்டும் மழை


போட்டி நடைபெறும் எக்பாஸ்டனில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு சிறப்பாக ஆடினால் மட்டும் போதாது. வருண பகவானும் வழிவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.