அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டத்தில் வியாழக்கிழமை இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டத்தில் வியாழக்கிழமை இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும்.
அத்துடன், கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் உரிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்கவுள்ளனர்.
அதேவேளையில் இலங்கை அணியானது, தனது முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியினர் உள்ளனர்.
இதனிடையே, இந்த இரு அணியினரையும் பின்னுக்குத்தள்ளி மழை களம் காணுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. வானிலை அறிக்கையின்படி, லண்டனில் வியாழக்கிழமை மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 11-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, அதற்கு முன்பாக இலங்கை அணியை எதிர்கொள்வதால், கடைசி குரூப் லீக் ஆட்டத்தை நெருக்கடி இன்றி எதிர்கொள்ள இயலும்.
இரு அணிகளைப் பொருத்த வரையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலத்துடன் காணப்படுகிறது. பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, தவன், கோலி, யுவராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதே உத்வேகத்துடன் அவர்கள் இலங்கை பந்துவீச்சையும் சிதறடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
இலங்கை அணியைப் பொருத்த வரையில், உபுல் தரங்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அந்த அணிக்கான பின்னடைவாக உள்ளது. எனினும், காயத்திலிருந்து மீண்டுள்ள அந்த அணியின் கேப்டன் மேத்தியூஸ் இந்திய அணிக்கு எதிராக களம் காண்கிறார். தடுமாறி வரும் தினேஷ் சண்டிமல், கபுகெடரா ஆகியோர் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
பந்துவீச்சில், இந்திய அணியின் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சமி, அஸ்வின் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க உள்ளனர்.
இலங்கை தரப்பில் மேத்யூஸ் பந்துவீசாத நிலையில், மலிங்கா சிறப்பாக செயல்படாத பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
மேத்யூஸ் பேட்டிங் மட்டும்; கபுகெடரா காயம்
காயத்தில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களம் காணும் இலங்கை கேப்டன் மேத்யூஸ், பந்துவீச மாட்டார் எனவும், பேட்டிங் மட்டும் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பயிற்சியின்போது முழங்கால் காயம் காரணமாக கபுகெடரா வெளியேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அணிகள் விவரம்
இந்தியா
விராட் கோலி (கேப்டன்)
ஷிகர் தவன், ரோஹித் சர்மா
யுவராஜ் சிங்,
தோனி (விக்கெட் கீப்பர்)
கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா
ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா
உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார்
முகமது சமி, அஸ்வின்
ரஹானே, தினேஷ் கார்த்திக்
இலங்கை
ஏஞ்ஜெலோ மேத்யூஸ் (கேப்டன்) தினேஷ் சண்டிமல்
நிரோஷன் திக்வெல்லா
சமரா கபுகெடரா, குசல் மெண்டிஸ்
குசல் பெரரா, திசர பெரரா
சீகுகே பிரசன்னா, நுவன் பிரதீப்
சுரங்கா லக்மல், லக்ஷன் சன்டகன்
மலிங்கா, குணரத்னே
நுவன் குலசேகரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...