அரசுப் பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லை
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் கேள்விக்குறியாகியுள்ளது.


அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் 2 உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளை பொருத்தவரை ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சில இடங்களில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வாரத்துக்கு 28 பாடவேளைகள் இவர்கள் பணிபுரிய வேண்டும் என்பது அரசு விதி. உடற்கல்வி தொடர்பான பாடங்கள் நடத்துவது, குழு விளையாட்டு மற்றும் தடகள போட்டித் திறன் கற்பித்தல், யோகா (நண்பகல் 12 மற்றும் கடைசி பாட வேளைகளில்), வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு உடற்பயிற்சி, உடற்கல்வி தொடர்பான பதிவேடு பராமரிப்பு ஆகிய பணிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர பள்ளிகளில் ஆண்டுதோறும் உள்ளிடைப் போட்டிகள் நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டியதும் உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு.
ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், இந்த பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை. பல பள்ளிகளில் விளையாடுவதற்கான இடவசதியில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அந்த வசதிகள் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. மலைப் பகுதி பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு நடைபெறும்போது, எந்த ஆசிரியரும் தேர்வு செய்வதில்லை. இதனால், பல ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலையிலேயே மலைப்பகுதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மட்டுமின்றி, உடற்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பரிசோதிக்கும் களமாகவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன. இந்த போட்டிகள், குறுவட்டம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநிலம் என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன.
இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறுவட்டம் மற்றும் கல்வி மாவட்ட நிலைகளை கடந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதில்லை. தமிழக அளவில் ஒரு சில அரசு பள்ளிகள் மட்டுமே, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியரின் தனிப்பட்ட முயற்சியால் மாநில அளவிலான போட்டிகளில் வாகை சூடுகின்றன.
கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, எறிபந்து, பூப்பந்து, இறகுப் பந்து, கபடி, கோகோ, மேஜைப் பந்து உள்ளிட்ட வழக்கமான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, வாள்சண்டை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் அரசின் சார்பில் நடத்தப்படுகின்றன. இந்த வகையான விளையாட்டுகளில் தனியார் பள்ளிகளும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளும் மட்டுமே அதிக அளவில் சாதிக்கின்றனர்.
இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.10 கோடி வரை அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போட்டிகளில் பங்கேற்காமலேயே முடங்கி விடுகின்றனர்.
பல பள்ளிகளில் விளையாட்டுக்கு பாடவேளை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பல மாற்றங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு 2017- 18 கல்வியாண்டில் உடற்கல்வி விஷயத்திலும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
32 மாவட்டங்களிலும் பொறுப்பு பணியிடம்
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் பொறுப்பு பதவியாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மூத்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மூலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் 2 முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அதில் ஒன்று பொறுப்பு நிலையில் உள்ளது. பொறுப்பு பதவியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், பிற உடற்கல்வி ஆசிரியர்களின் பணித்திறனையும், குறைகளையும் சுட்டிக்காட்ட முடியாத நிலை உள்ளது.
பயணச் செலவு உயர்த்தப்படுமா?
பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது அவர்களின் போக்குவரத்துச் செலவு மற்றும் உணவுக்காக அரசுத் தரப்பில் நிதி வழங்கப்படுகிறது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா ரூ.7 வீதமும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.14 வீதமும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா ரூ.21 வீதமும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.
பல பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் அந்த பணத்தையும் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால், மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்வதில்லை எனகூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...