இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பிசிசிஐயில் நிலவும் 'சூப்பர் ஸ்டார்' கலாசாரம்: தோனி, கவாஸ்கர் மீது ராமச்சந்திர குஹா சாடல்!

பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ராமச்சந்திர குஹா, வினோத் ராய்க்கு எழுதிய கடிதத்தில்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

எழில்

பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ள வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா, பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கு எழுதிய கடிதத்தில் பல முக்கியமான பிரச்னைகளை முன்வைத்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை மறுசீரமைக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு சில பரிந்துரைகளை அளித்தது. ஆனால் அந்த பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ காலம் கடத்தி வந்தது. இதையடுத்து கோபமடைந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்துவதை கண்காணிப்பதற்காகவும், பிசிசிஐயை நிர்வகிப்பதற்காகவும் முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். அதில் ஐடிஎஃப்சி இயக்குநர் விக்ரம் லிமாயே, ராமச்சந்திர குஹா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இந்தக் குழு அமைக்கப்பட்டு 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில், ராமச்சந்திர குஹா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அளித்துள்ளார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ராமச்சந்திரா குஹாவின் மனுவை கோடைகால சிறப்பு அமர்வு விசாரிக்கும். அவருடைய ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக ஜூலை 14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் மற்றும் பிசிசிஐயிடமும் குஹா தனது ராஜிநாமா குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கு எழுதிய கடிதத்தில் குஹா கூறியதாவது:

பிசிசிஐயில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதற்காக நான் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

* இரட்டை ஆதாயம் குறித்து பிசிசிஐயின் சில முடிவுகள் பாரபட்சமாக உள்ளன. தேசிய அளவிலான பயிற்சியாளர்களுக்கு 10 மாத ஒப்பந்தம் மட்டுமே அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு மாதங்களில் அவர்கள் ஐபிஎல் அணிகளுக்குப் பணிபுரிவதற்காக இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. 

பிசிசிஐ பயிற்சியாளர்கள் ஐபிஎல்-லில் ஒப்பந்தம் செய்துகொள்வது லோதா பரிந்துரைகளுக்கு எதிரானது. அவர்களால் இரு அமைப்புக்கும் நியாயம் செய்யமுடியாது. தேசிய அளவிலான பொறுப்புகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதுதொடர்பாக பலமுறை என் கருத்துகளைக் கூறியுள்ளேன். இந்திய அணியுடனோ அல்லது நேஷனல் கிரிக்கெட் அகாடமியுடனோ இரண்டில் யார் ஒப்பந்தம் வைத்திருந்தாலும் அவர்கள் ஐபிஎல்-லில் பணிபுரியக்கூடாது. 

* சுனில் கவாஸ்கர் தலைவராக உள்ள பிஎம்ஜி நிறுவனத்தில் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர். கவாஸ்கர் பிசிசிஐ வர்ணையாளர் குழுவிலும் உள்ளார். இது இரட்டை ஆதாயம் பெறுகிற முயற்சி. கவாஸ்கர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிட்டால் பிசிசிஐ சார்பாக வர்ணனை செய்வதையும் நிறுத்த வேண்டும். பிசிசிஐயில் புகழ்பெற்ற வீரர்களும் நபர்களும் விதிமுறைகளை மீற அனுமதிக்கப்படுகிறார்கள். (தோனி ஒரு நிறுவனத்தில் பங்குகள் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தில் இந்திய வீரர்கள் பலர் பணிபுரிகிறார்கள்). இது நிச்சயம் நிறுத்தப்படவேண்டும். இதுதொடர்பாக நான் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

சூப்பர் ஸ்டார்கள் மீது பிரமிப்பு கொண்டு பிசிசிஐ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. பிசிசிஐ அதிகாரிகள் தங்கள் பதவியை அனுபவிக்க எண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் பாதுகாக்கிற வீரர்களும் பயிற்சியாளர்களும் இவர்கள் தவறு செய்யும்போது உறுதுணையாக இருப்பார்கள் என எண்ணுகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, ஒரு வீரரின் முன்னாள் சாதனைகளைக் கருத்தில்கொள்ளக் கூடாது. நியாயமான நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது. 

* சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பிசிசிஐ ஒப்பந்தத்தையும் பாதிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத தோனிக்கு, கிரேட் ஏ ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இது தவறான கருத்தை உருவாக்குகிறது. 

* கும்ப்ளேவின் ஒப்பந்தம் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது. கடந்த ஒருவருடமாக இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடிவருகிறது. இதற்குப் பயிற்சியாளர்களும் இதர நிர்வாக உறுப்பினர்களும் கூட காரணம்தான். நியாயம் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் முடிவெடுத்தால் கும்ப்ளேவுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவருக்கு அத்தகைய பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. 

இந்த விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை. கும்ப்ளே விவகாரம் தொடர்பாக ஏப்ரல், மே-யில் ஏன் முடிவெடுக்கவில்லை. கேப்டன் - பயிற்சியாளர் இடையே மோதல் என்றால் அப்பிரச்னையை ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடனே விசாரித்திருக்கலாம். ஒரு முக்கியமான சர்வதேசப் போட்டி தொடங்கும் முன்பு ஏன் இப்பிரச்னை வெளியே வரவேண்டும்? பயிற்சியாளர் மீது ஐந்து மூத்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் பிசிசிஐயில் உள்ள சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை எதிரொலிக்கிறது. இதுபோன்ற அந்தஸ்து வேறு எந்த நாட்டின் விளையாட்டு அணியிலும் வழங்கப்படுவதில்லை. இந்திய அணியில் யார் இடம்பெறவேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நிலைமையில் உள்ளார்கள் மூத்த வீரர்கள். இந்த வரிசையில் பயிற்சியாளர் வந்தால் அடுத்ததாக தேர்வுக்குழுவினர், பிசிசிஐ நிர்வாகிகளையும் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறார்களா? 

* உள்ளூர் போட்டிகளை நம்பி வீரர்கள் பலர் உள்ளார்கள். ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்தை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்குச் செலவழிக்க வேண்டும். ஆனால் ரஞ்சி வீரர்களுக்கு மிகக்குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. ஒருநாளைக்கு ரூ. 30,000 மட்டுமே. இது சரிசெய்யப்படவேண்டும். 

* உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை சங்க உறுப்பினர்கள் மீறும்போது பிசிசிஐ நிர்வாகக் குழு அமைதியாக இருந்திருக்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பிசிசிஐ கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுக்கிறார்கள். இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்தன. நிர்வாகக் குழு இப்பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லத் தவறிவிட்டது. சரியான வழிமுறைகளைச் சொல்லத் தவறிவிட்டது. 

* நிர்வாகக் குழுவில் ஆண் கிரிக்கெட் வீரர் இடம்பெறவில்லை. இதுகுறித்து நான் முயற்சி எடுத்தேன். ஜவகல் ஸ்ரீநாத் பெயரைப் பரிந்துரைத்தேன். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் இடம்பெற்றிருந்தால் மேலே குறிப்பிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கமுடியும். டயானா எடுல்ஜி சிறப்பாகப் பணியாற்றி வந்தாலும் ஆண் கிரிக்கெட் வீரர் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. 

* நம்முடைய கூட்டங்கள் நல்ல புரிந்துணர்வுடன் நடைபெற்றாலும் சில முக்கியமான முடிவுகள் எல்லோருக்கும் தெரிவிக்கப்படவில்லை. 

நான் விலகினாலும் எனக்குப் பதிலாக நிர்வாகத் திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு ஆண் கிரிக்கெட் வீரர் குழுவில் இடம்பெற வேண்டும். இது என் கோரிக்கை.

என்று குஹா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தின் மூலமாக பிசிசிஐயின் பல பிரச்னைகளை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளதால் பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.