/

காலே டெஸ்ட்: இந்தியா 600 ரன்கள் குவிப்பு: 'பாலோ-ஆன்' தவிர்க்க இலங்கை போராட்டம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

News image
இலங்கையின் குணதிலகாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது சமி.
Updated On :29 ஜனவரி 2024, 4:32 pm

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 'பாலோ-ஆனை' தவிர்க்க இன்னும் 247 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 144, ரஹானே 39 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தனர்.
புஜாரா 153: 2-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் புஜாரா 257 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அவரைத் தொடர்ந்து ஹெராத் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 118 பந்துகளில் அரை சதம் கண்டார் ரஹானே. இந்தியா 97.4 ஓவர்களில் 423 ரன்கள் எடுத்திருந்தபோது புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 265 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் குவித்து பிரதீப் பந்துவீச்சில் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது.
அஸ்வின் 47: இதையடுத்து அஸ்வின் களமிறங்க, ரஹானே 130 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம்புகுந்த விருத்திமான் சாஹா 16 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களம்கண்ட அறிமுக வீரரான ஹார்திக் பாண்டியா பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார்.
இதனிடையே அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் மேற்கண்ட ரன்களை எடுத்தார்.
இதன்பிறகு களம்புகுந்த ரவீந்திர ஜடேஜா பவுண்டரியை விளாச, 117-ஆவது ஓவரில் 500 ரன்களைக் கடந்தது இந்தியா. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா 4 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை கருணாரத்னே கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற பாண்டியா பின்னர் அதிரடியில் இறங்கினார்.
பாண்டியா அரை சதம்: இதன்பிறகு ஜடேஜா 15 ரன்களில் நடையைக் கட்ட, முகமது சமி களம்புகுந்தார். அவர், வந்த வேகத்தில் சிக்ஸரை விளாச, பாண்டியா தன் பங்கிற்கு பிரதீப் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதைத் தொடர்ந்து பாண்டியா ஒரு சிக்ஸரையும், சமி இரு சிக்ஸர்களையும் விளாச, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
தொடர்ந்து வேகம் காட்டிய சமி 30 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்த்து வெளியேற, உமேஷ் யாதவ் களம்புகுந்தார். அவரும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரை விளாச, பாண்டியா 48 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 49 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்தியாவின் இன்னிங்ஸ் 133.1 ஓவர்களில் 600 ரன்களோடு முடிவுக்கு வந்தது. உமேஷ் யாதவ் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கைத் தரப்பில் நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை 154/5: பின்னர் ஆடிய இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே 2 ரன்களிலும், தனுஷ்கா குணதிலகா 16 ரன்களிலும், குசல் மென்டிஸ் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 15 ஓவர்களில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த உபுல் தரங்கா-ஏஞ்செலோ மேத்யூஸ் ஜோடி ஓரளவு சிறப்பாக ஆட, இலங்கை அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. உபுல் தரங்கா 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டிக்வெல்லா 8 ரன்களில் நடையைக் கட்ட, தில்ருவான் பெரேரா களம்புகுந்தார். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 54, தில்ருவான் பெரேரா 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
'பாலோ - ஆன்' பிடியில்...
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை அணி இன்னும் 446 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் 'பாலோ-ஆனை' தவிர்க்க 247 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. காயம் காரணமாக குணரத்னே விலகிவிட்டதால், அவர் இந்த போட்டியில் பேட் செய்ய முடியாது. அதனால் இலங்கை அணி 'பாலோ-ஆன்' பிடியில் சிக்கியுள்ளது.

Story image
Story image

துளிகள்...
* கடந்த டிசம்பருக்கு பிறகு விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஓர் இன்னிங்ஸில் 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவிப்பது இது 5-ஆவது முறையாகும். அதேநேரத்தில் டெஸ்ட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் இந்திய அணி 28-ஆவது முறையாக 600 ரன்கள் குவித்துள்ளது.
* இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதுவரையில் 4 இந்தியர்கள் ஓர் இன்னிங்ஸில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ஷிகர் தவன் 190 ரன்களும், புஜாரா 153 ரன்களும் குவித்துள்ளனர். சச்சின் (203), சேவாக் ( 201) ஆகியோர் மற்ற இருவர்.
* இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் அறிமுக டெஸ்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹார்திக் பாண்டியா. இதற்கு முன்னர் பல்விந்தர் சாந்து, விஜய் யாதவ், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவன் ஆகியோர் தலா 2 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இதுதவிர அறிமுகப் போட்டியில் 8 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அரை சதமடித்த 7-ஆவது இந்தியர் என்ற பெருமையும் பாண்டியா வசமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.