நிதானமும் அதிரடியும் கலந்த நியூஸிலாந்து இன்னிங்ஸ்: பரபரப்பாக முடிந்த முதல்நாள்!


நியூஸிலாந்து 286/7 (ராவல் 84, கிராண்ட்ஹோம் 58, கேப்ரியல் 3-83) vs மே.இ. அணி
மேற்கிந்தியத் தீவுகள்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த முடிவு தவறோ என்று எண்ணும் அளவுக்குச் சிறப்பாக விளையாடினார்கள் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள். ரன்களை நிதானமாக எடுத்தாலும் ஒரு கட்டத்தில் 50-வது ஓவரின்போது 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது நியூஸிலாந்து.
ஆனால், 43 ரன்களில் கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கம்மின்ஸ் பறித்தார். இதன்பிறகு அடுத்த 35 ஓவர்களில் மே.இ. அணி கடகடவென விக்கெட்டுகளை எடுத்து ஓரளவு மீண்டு வந்தது. ஆனாலும் இன்றைய நாளின் கடைசிப் பகுதியில் கிராண்ட்ஹோம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் உயர்ந்தது. இறுதியில் அவரும் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 58 ரன்களில் வெளியேறினார். இது நியூஸிலாந்து அணிக்குப் பலத்த பின்னடைவாக அமைந்துவிட்டது. தொடக்க வீரர் ராவல் 157 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து கேப்ரியல் பந்துவீச்சில் வீழ்ந்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டெய்லர், நிகோல்ஸ், சாண்ட்னர் ஆகியோர் முறையே 16,13,24 ரன்களில் வெளியேறியதால் இந்த ஆட்டத்தில் மே.இ. அணி மீண்டெழ ஒரு வாய்ப்பு கிடைத்தது. 50 ஓவர்கள் வரை நியூஸிலாந்து பக்கம் இருந்த இந்த டெஸ்ட் போட்டி பிறகு மே.இ. வசம் சென்றாலும் கிராண்ட்ஹோம் எடுத்த ரன்கள் நியூஸிலாந்து அணிக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளன.
நிதான ஆட்டம், அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றுதல், கிராண்ட்ஹோமின் அதிரடி என முதல் நாளில் பரபரப்புக்கும் சுவாரசியத்துக்கும் பஞ்சமில்லை.
2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் நியூஸிலாந்து 87 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. புளுண்டல் 12 ரன்களும் வாக்னர் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளார்கள். மே.இ. பந்துவீச்சாளர்களில் சேஸும் (12 ஓவர்களில் 78 ரன்கள்) கேப்ரியலும் (19 ஓவர்களில் 79 ரன்கள்) நிறைய ரன்களை வாரி வழங்கினாலும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...