ஐபிஎல்: நாளை முதல் அமர்க்களமாக ஆரம்பம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் நாளை ஹைதராபாதில் தொடங்குகிறது.


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் நாளை ஹைதராபாதில் தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதனிடையே, இதர ஆட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜ்கோட் மைதானத்தில் குஜராத் லையன்ஸ் அணி சந்திக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏப்ரல் 8-ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதேநாளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்தூரில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒரு ஐபிஎல் போட்டியும் ஒதுக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் நிச்சயம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.14.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை வாங்கியது புணே. மற்றொரு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா.
ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கானை ரூ.4 கோடிக்கும், முகமது நபியை ரூ.30 லட்சத்துக்கும் ஹைதராபாத் அணி வாங்கியது. ஐக்கிய அரபு அமீரக வீரர் சிராக் சூரியை ரூ.10 லட்சத்துக்கு குஜராத் அணி வாங்கியது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேற்கண்ட மூவரும் நெதர்லாந்தின் ரியான் டென்தஸ்சாத்தேவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆவர்.
கடந்த முறை டெல்லி அணியால் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பவன் நெஹியை, இந்த முறை பெங்களூர் அணி ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேநேரத்தில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் போயினர். அவர்களில் அதிகபட்சமாக தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் போனார். இவர் தனது அடிப்படை விலையைவிட (ரூ.10 லட்சம்) 30 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறார்.
நாளை நடைபெறும் போட்டிக்கு பெங்களூர் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் செயல்படுவார். 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆன்ட்ரே ரஸலுக்குப் பதிலாக நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான காலின் டி கிராண்ட்ஹோம் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேறெந்த ஐபிஎல்-லிலும் இதுபோல ஏற்பட்டதில்லை. முன்னணி இந்திய வீரர்கள் வீரர்கள் உள்பட பலர் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள்.
அஸ்வின், ராகுல், விஜய் என மூன்று முக்கிய இந்திய வீரர்கள் ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். விஜய் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களில் டி காக், டுமினி, ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், பீட்டர்சன் ஆகிய வீரர்கள் காயம் மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். காயம் காரணமாக கோலி, டிவில்லியர்ஸ், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். பட்டியலில் நாளுக்கு நாள் புதுப்புது வீரர்கள் சேர்கிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம், அவர்கள் இடத்தில் நிறைய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. இதனால் இந்த ஐபிஎல் புதுமாதிரியான அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி இணைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து அதை கொண்டாட முடிவு செய்துள்ளது அந்த அணி நிர்வாகம். அதன் ஒரு பகுதியாக மும்பை அணியுடன் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் சச்சின், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. மும்பை அணியின் 10 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி அதன் உரிமையாளர்கள் முகேஷ்-நீதா அம்பானியின் இல்லத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2008 முதல் மும்பை அணிக்காக விளையாடி வந்த சச்சின் 2013-இல் ஓய்வு பெற்றார். அது முதல் தற்போது வரையில் அந்த அணியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகியோர் இன்னும் அந்த அணிக்காக விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னாள் பயிற்சியாளர்கள், இந்நாள் பயிற்சியாளர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிசிசிசிஐ மற்றும் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பாலிவுட் நட்சத்திரங்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சாம்பியன்கள்
2008: ராஜஸ்தான் ராயல்ஸ்
2009: டெக்கான் சார்ஜர்ஸ்
2010: சென்னை சூப்பர் கிங்ஸ்
2011: சென்னை சூப்பர் கிங்ஸ்
2012: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013: மும்பை இந்தியன்ஸ்
2014: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015: மும்பை இந்தியன்ஸ்
2016: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...