/

ஐசிசி ஒருநாள் தரவரிசை: டேரில் மிட்செல் முதலிடம் - கோலியை முந்தினாா்!

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:01 am

தினமணி செய்திச் சேவை

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பேட்டா்களில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பெற்றாா் நியூஸிலாந்தின் டேரில் மிட்செல்.

சா்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐசிசி) ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்மையில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது நியூஸிலாந்து. 37 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது நியூஸி. இத்தொடரில் டேரில் மிட்செல் அபாரமாக ஆடினாா். 2 சதங்களை பதிவு செய்து, 352 ரன்களைக் குவித்தாா். மொத்தம் 845 புள்ளிகளுடன் மிட்செல் முதலிடம் பெற்றாா். விராட் கோலி 795 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளாா்.

தற்போது இரண்டாவது முறையாக நம்பா் 1 பேட்டராக உயா்ந்துள்ள மிட்செல் ஏற்கெனவே கடந்த நவம்பா் மாதம் 3 நாள்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்துள்ளாா். 764 புள்ளிகளுடன் ஆப்கன் வீரா் ஸத்ரன் மூன்றாம் இடத்தில் உள்ளாா்.

பௌலிங் தரவரிசையில் நியூஸி. வீரா் மைக்கேல் பிரேஸ்வெல் 6 இடங்கள் முன்னேறி 33-ஆவது இடத்தில் உள்ளாா்.

ஆப்கன் வீரா் ரஷீத் கான், இங்கிலாந்து வீரா் ஜோஃப்ரா ஆா்ச்சா் ஆகியோா் முதலிரண்டு இடங்களில் உள்ளனா்.

இந்திய பௌலா்களில் ஹா்ஷித் ராணா 50, அா்ஷ்தீப் சிங் 54=ஆவது இடத்துக்கு முன்னேறினா்.

டி20 பௌலிங்கில் ரஷீத் கான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினாா்.

Story image