/

சாம்பியன்ஸ் டிராபி: ஷுப்மன் கில் சதம்! இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி....

News image
- BCCI
Updated On :20 பிப்ரவரி 2025, 5:01 pm

DIN

துபை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அனியி முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க திணறியது. 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறிய நிலையில், தௌகித் ஹிரிடாய் மற்றும் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது.

ஜேக்கர் அலி 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தௌகித் ஹிரிடாய் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 49.4 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிப்பிடிக்க களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் பொறுப்பாக விளையாடினர். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் திரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். 129 பந்துகளில் 101 ரனக்ள் விளாசிய ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலி 22 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களுக்கும், அக்சர் படேல் ஆட்டமிழந்தனர். கே எல் ராகுல் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.