டி 20 உலகக் கோப்பை: இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் அணி எது?
6-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ஒரு சாதனை நிகழவுள்ளது.


6-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ஒரு சாதனை நிகழவுள்ளது. டி20 உலகக் கோப்பையை இதுவரை எந்த ஓர் அணியும் இருமுறை வென்றதில்லை. ஆனால் தற்போது போட்டியில் இருக்கும் இங்கிலாந்து, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகளும் ஏற்கெனவே ஒருமுறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் புதிய சாதனை படைக்க 3 அணிகளும் ஆர்வமாக உள்ளன.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. எஞ்சிய அணிகளான ஜிம்பாப்வே, ஹாங்காங், அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகியவை முதல் சுற்றில் விளையாடின. அதிலிருந்து இரு அணிகள் சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்றன. கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாகபுரி, தில்லி, பெங்களூரு, தர்மசாலா ஆகிய 7 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. முன்னதாக 2010-ல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து, அதில் சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது அரையிறுதியில், இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
முதல் அரையிறுதியில் தோற்ற நியூஸிலாந்து அணி, இதுவரை கோப்பையை வென்றதில்லை. முதல் உலகக் கோப்பை போட்டியில் மட்டும் அரையிறுதி வரை முன்னேறிய நியூஸிலாந்து அணி, அதில் பாகிஸ்தானிடம் தோற்றது. அதன்பிறகு நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அந்த அணி குரூப் சுற்றைத் தாண்டியதில்லை. இப்போது அரையிறுதியில் நுழைந்தும் பயன் இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தத் தடவை இங்கிலாந்து, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகளில் ஓர் அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லவுள்ளது. அதேபோல இதுவரை நடந்த எல்லா போட்டிகளிலும் புதிய சாம்பியன் கிடைத்ததுண்டு. இந்தமுறை அந்த வழக்கமும் மாற உள்ளது.
கடந்த 5 உலகக் கோப்பைகளில் இந்திய அணி 2007-ல் கோப்பையை வென்றது. 2014-ல் இறுதிச்சுற்று வரை முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 5 தொடர்களிலும் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை, ஏற்கெனவே கோப்பையை வென்ற அணி மீண்டும் வென்றதில்லை. ஆனால் இந்த முறை போட்டியை நடத்தும் இந்தியா, அந்த வரலாற்றை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் சாம்பியன் ஆகியுள்ளது இந்தியா. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கும் தோனி படைக்கே இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் மட்டுமல்ல, எதிரணிகளின் கேப்டன்களும்கூட கணித்திருக்கிறார்கள்.
***
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.67 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.23.5 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.5 கோடியும் வழங்கப்படுகின்றன. இதுதவிர போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்படுகின்றன.
இதுவரை சாம்பியன்கள்
2007 இந்தியா
2009 பாகிஸ்தான்
2010 இங்கிலாந்து
2012 மேற்கிந்தியத் தீவுகள்
2014 இலங்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...