பிசிசிஐ வட்டாரங்கள் நிலவரம் குறித்து அப்போது கூறுகையில், ‘பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனுராக் தாக்குரை ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்கள் தில்லியில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது. அப்போது கடந்த 18 மாதங்களில் ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அனுராக் தாக்குர் பாராட்டியுள்ளார். அதேநேரத்தில் தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதனால் மற்ற விண்ணப்பதாரர்களைப் போலவே ரவி சாஸ்திரி கூட்டணியும் முறையாக விண்ணப்பிப்பதுதான் நியாயமாக இருக்கும். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ‘லெவல் 3' பயிற்சியாளர் படிப்பை முடித்திருப்பதோடு, சீனியர் அணிகளுக்கு பயிற்சியளித்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் தனது நாட்டுக்காக 50 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுதான் தற்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. பயிற்சியாளர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறினால், 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிக்க முடியாது. ஆனால் இப்போது அதுபோன்ற விதிகள் இல்லாததால் ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது' என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.