சாய்னாவின் ஒலிம்பிக் சவால்!
2008-ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் தனிநபர் பிரிவில் சாய்னா நெவால் காலிறுதி வரை முன்னேறியபோதும், 2009 உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோதும், இதோ இந்தியாவுக்கு மற்றொரு விளைய


2008-ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் தனிநபர் பிரிவில் சாய்னா நெவால் காலிறுதி வரை முன்னேறியபோதும், 2009 உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோதும், இதோ இந்தியாவுக்கு மற்றொரு விளையாட்டு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்று நாடே கொண்டாடியது.
÷ரசிகர்களின் நம்பிக்கைக்கு சிறிதும் குறைவு ஏற்படாமல், சாய்னாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 2009-ல் பி.டபிள்யூ.எஃப். சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ், ஹாங்காங் சூப்பர் சீரிஸ், இண்டியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி என 2010-ல் 5 சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா.
அந்த ஆண்டு ஜூனில் சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார். தொடர் வெற்றிகளால் தரவரிசையில் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார் இந்த ஹைதராபாத் மங்கை.
2010-ல் பத்மஸ்ரீ விருதும் அவரைத் தேடி வந்தது. விளையாட்டுத் துறையில் உயர்ந்த கெüரவமாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2010-ல் தனது 20-வது வயதிலேயே பெற்றார்.
÷சர்வதேச பாட்மிண்டன் பத்திரிகையான "பாட்சின்' தனது வாசகர்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் 2010-ம் ஆண்டின் சிறந்த பாட்மிண்டன் வீராங்கனையாகவும் தேர்வானார்.÷ஆனால் 2011-ம் ஆண்டு சாய்னாவுக்கு சோதனை ஆண்டாகவே அமைந்தது. கொரியன் ஓபன், இங்கிலாந்து ஓபன் போட்டிகளில் முதன்மைச் சுற்றுகளிலேயே வெளியேறினார். எனினும் 2011- மார்ச்சில் ஸ்விஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் பெற்ற தொடர் தோல்விகளால் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த ஆண்டில் பல போட்டிகளில் பங்கேற்றாலும் அவர் வென்றது ஒரே ஒரு சாம்பியன் பட்டம்தான்.
÷சாய்னாவின் ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வரும் மூத்த பாட்மிண்டன் வீரர்கள் கூறும் கருத்து, சாய்னாவிடம் முந்தைய ஆக்ரோஷமும், வேகமும் குறைந்துவிட்டது என்பதுதான்.
÷சாய்னா பெற்றுள்ள வெற்றிகளில் பெரும்பாலானவற்றில் முதல் இரண்டு செட்களை வென்று போட்டிகளை வென்றதுதான் அதிகம். ஆட்டம் 3-வது செட்டுக்கு செல்லும்போது அது சாய்னாவுக்கு சாதகமாக அமைவது அரிதாகவே உள்ளது.
÷சாய்னாவின் தோல்விகள் குறித்து சமீபத்தில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாட்மிண்டன் வீரர் புலேலா கோபிசந்த், சாய்னா பெரும்பாலும் சீன வீராங்கனைகளிடமே தோல்வியைச் சந்திக்கிறார். சீன வீராங்கனைகளை எதிர்த்து விளையாடும்போது, அவரை அறியாமலேயே ஓர் அச்ச உணர்வுக்கு தள்ளப்படுவது, ஆட்டத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. கடந்த ஆண்டு சாய்னாவிடம் பெற்ற தோல்விகளுக்குப்பின் சீன வீராங்கனைகள் சாய்னாவின் ஆட்டமுறையை பல்வேறு கோணங்களில் விடியோ மூலம் ஆராய்ந்து, அவரை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். இதுவும் அவர்கள் சாய்னாவை வீழ்த்தக் காரணம். எனினும் தீவிர பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி சாய்னாவின் வசமாகும் என்றார்.
மற்றொரு முதுபெரும் பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனும், சாய்னா மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் பல போட்டிகளில் அவர் தோல்வியடைந்து இருந்தாலும், அதில் இருந்து மீள சிறிய கால அவகாசம் போதும், லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 8 மாதங்கள் வரை உள்ளன. இப்போதே தயாராகத் தொடங்கினால், சாய்னாவின் ஒலிம்பிக் பதக்கக் கனவு நிறைவேறும் என்று பிரகாஷ் படுகோன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார்கள் என்று நம்பப்படுபவர்களின் வரிசையில் சாய்னாவும் முன்னணியில் உள்ளார்.
÷கடந்த 2008-ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக கலந்து கொண்ட சாய்னா, முன்னணி வீராங்கனைகள் பலருக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்து காலிறுதி வரை முன்னேறியதை எளிதில் மறந்துவிட முடியாது. காலிறுதியில் கூட நூலிலையில்தான் அவர் வெற்றியைத் தவற விட்டார். அப்போதே அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
÷ஒலிம்பிக் போட்டிக்காக இப்போது தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பாட்மிண்டனில் குறைந்த வயதிலேயே இந்தியாவின் புகழை நிலைநாட்டிய சாய்னா, ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று இந்தியாவின் தங்க மங்கை ஆவார் என்று நம்புவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...