/

என்ன ஆச்சு இங்கிலாந்துக்கு!

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி அடைந்துள்ள தோல்விகள் அந்நாட்டு வீரர்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மட்டுமின்றி ஒட்டு மொ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:48 pm

சு. வெங்கடேஸ்வரன்

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி அடைந்துள்ள தோல்விகள் அந்நாட்டு வீரர்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி 338 ரன்களை எட்டிப்பிடித்து ஆட்டத்தை "டை' செய்தனர் இங்கிலாந்து வீரர்கள். பார்க்கப் போனால் இது அந்த அணிக்கு அறிவிக்கப்படாத வெற்றிதான்.

ஆனால் அடுத்த ஆட்டத்தில் 327 ரன்கள் எடுத்தும் அயர்லாந்திடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. அடுத்த ஆட்டத்திலேயே மற்றொரு வலுவான அணியான தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது இங்கிலாந்து. இதில் முதலில் ஆடிய அந்த அணி 171 ரன்களே எடுத்தது. ஆனாலும் 165 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம், தங்கள் மீதான நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டது. அயர்லாந்துடனான தோல்வி எதிர்பாராதது என்ற சமாதானத்தையும் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்து எளிதில் வென்றுவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசம் அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியது. எதிர்பாராத தோல்வியால் இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு ஆளாயினர். கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 3 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய போதும், ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்ற நிலையே உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து களம் இறங்கியது. டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் உள்ள ஆல்ரவுண்டர்கள் கிரேம் ஸ்வான், ஸ்டூவர்ட் பிராட், பேட்ஸ்மேன் ஜொனாதன் டிராட், பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆகியோரும் அணியில் உள்ளனர். இவர்கள் தவிர கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், இயான் பெல், காலிங்வுட் ஆகியோரும் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்.

பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை, சிறப்பான பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்தும் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் இப்போது பரிதாபத்துக்கு உரிய அணியாக மாறிவிட்டது.

பொதுவாக கிரிக்கெட்டில் ஓர் அணியின் ஆட்டத்திலும் வீரர்களின் ஆட்டத்திலும் "கன்ஸிஸ்டென்ஸி' எனப்படும் "ஒரே சீரான' ஆட்டமே அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித்தரும். ஆனால் இங்கிலாந்து அணியில் "கன்ஸிஸ்டென்ஸி' என்பது காணாமல் போன பட்டியலில் சேர்ந்துவிட்டது.

இந்தியாவுக்கு எதிராக 327 ரன்களை விரட்டிப்பிடித்த அந்த அணியால், வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்தும் 225 ரன்களே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்காவை 165 ரன்களில் சுருட்டும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள், அயர்லாந்தை 329 ரன்கள் வரை எடுக்கவிட்டனர். ஆட்டத்துக்கு ஆட்டம் தடுமாற்றம் என்பதே சிறிய அணிகளிடம் கூட அவர்கள் தோற்றதற்குக் காரணமாகும்.

முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், வேகப் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் போட்டியின் நடுவே விலக நேரிட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் தோல்விகளுக்கு இவற்றைக் காரணமாகக் கூறிவிட முடியாது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தந்த வெற்றி உற்சாகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் சோதனைக் களமாகவே மாறிவிட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஓர் ஆட்டம் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எஞ்சியுள்ளது. அதில் வென்றால்தான் காலிறுதி ஆட்டத்தில் நுழைவது குறித்து அந்த அணியால் நினைத்துப் பார்க்க முடியும்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கடைசி ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கு மாறும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததுதான். வங்கதேசத்துடனான தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "எங்கள் அணிக்கு உலகக் கோப்பை போட்டி இத்துடன் முடிந்துவிடவில்லை' என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

எனவே அந்நாட்டு ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இங்கிலாந்து அணி காப்பாற்றும் என்றே நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.