மணமாலை சூட இந்தக் கோயிலுக்கு வாங்க..!
ஆணோ, பெண்ணோ, உரியக் காலத்தில் திருமணம் நடந்தால்தான் பெற்றவர்களுக்கு


ஆணோ, பெண்ணோ, உரியக் காலத்தில் திருமணம் நடந்தால்தான் பெற்றவர்களுக்கு நிம்மதி. சிலர் தானாகவே திருமணத்தை தள்ளிப் போடுவார்கள். அப்படியில்லாமல், குரு தசை இருக்கும் பொழுது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ நல்ல காரியத்தை முடித்து விட வேண்டும் என்று பெற்றோர்கள் பிரயத்தனப் பட்டாலும் சிலருக்கு (வரன்களுக்கு) நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். திருமணம் கைகூடாது.
அப்படி வரன் அமையாமல் தள்ளிப் போயோ, தட்டிப் போயோ திருமணம் கூடி வராமல் இருந்தால், ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்குறையை நிவர்த்தி செய்கிறாள்.
சென்னையில், மைலாப்பூரில், முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா கோயில் உள்ளது. இங்கு உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது .அம்மனை வழிபட இரண்டு வகையான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வரனான பெண்ணோ, ஆணோ தொடர்ந்தாற்போல், ஐந்து அமாவாசை தினங்களில் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு, வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ள வேண்டும். வெற்றிலையில், காம்புப் பகுதியை மட்டுமே தொடுத்தாற்போல் மாலையாக்க வேண்டும். அந்த மாலையை அம்மனுக்கு சார்த்த வேண்டும். அதற்கு ராகு காலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை.
இரண்டாவதாக, தொடர்ந்தாற்போல் ஐந்து பௌர்ணமி தினங்களில், ராகு கால வேளையில், பூ மாலையைச் சார்த்தி வேண்டிக்கொள்ள வேண்டும். ஐந்து வாரங்கள் முடிந்தவுடன், திருமணம் கைகூடிய செய்தி வந்து விடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள். திருமணம் முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் அம்மனுக்கு தங்களால் இயன்ற காணிக்கையையோ அல்லது புடவை சார்த்துதல் போன்றவற்றை பிரியம் போல் செய்யலாம்.
ஆண்களால் ஐந்து அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் தொடர்ந்து செய்ய முடியும். ஆனால், பெண்கள் வீட்டு விலக்கானால் என்ன செய்வது என்கிற கேள்வி வருகிறது அல்லவா? அசௌகர்யமான அந்த தினத்தினைத் தவிர்த்து (கணக்கில் சேர்க்கக் கூடாது) அடுத்த அமாவாசை அல்லது பௌர்ணமியில் தொடரலாம்.
இந்தக் கோயிலில், உள்ளே நுழைந்தவுடன், கோயிலின் சுவற்றில், இரு பக்கங்களிலும், ஸ்ரீ சூரிய ஸ்ரீ சந்திரரும், அடுத்த கட்டத்தில், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ முருகரும் காணப்படுகிறார்கள். அடுத்தது இருக்கும் கர்ப்பகிரகத்தில், நடுநாயகமாக ஸ்ரீ திரௌபதி அம்மன் அருள்பாலிக்க, அம்மனுக்கு வலப்புறம், ஸ்ரீ தர்மராஜாவும் (ஸ்ரீ யுதிஷ்ட்டிரர்), ஸ்ரீ பீமனும், ஸ்ரீ நகுல ஸ்ரீ சகாதேவனும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் காணப்படுகிறார்கள். ஸ்ரீ அம்மனுக்கு இடப்புறம், ஸ்ரீ அர்ஜுனன் காணப்படுகிறார்.
ராகு கேது தோஷத்தால் திருமணம் தடைப்பட்டாலும், இங்கு வந்து வழிபாட்டினை மேற்கொள்ளலாம். கோயிலின் முதற்கட்டக் கூரையினில், ராகுவும், இரண்டாம் கட்டக் கூரையினில், கேதுவும் காணப்படுகிறார்கள்.
பழமையான சிறிய கோயில்தான் என்றாலும், கீர்த்தி பெரியதாக இருக்கிறது ஆகையால், வரன்களே, திருமணம் இன்னும் நடைபெறவில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபடுங்கள். நல்ல துணையையே அமைத்துத் தருவாள். ஆனந்த வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
- மாலதி சந்திரசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...