/

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:15 pm

என்.எஸ். நாராயணசாமி


இறைவன் பெயர்:
அமிர்தகடேஸ்வரர்
இறைவி பெயர்:
ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி

எப்படிப் போவது?

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில், சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மீ. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்துக்குச் செல்லலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,
மேலக்கடம்பூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 304.

இவ்வாலயம், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிரதோஷ பூஜை

ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபடுவதும், அவரது வாகனமான நந்திதேவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொள்வதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்புபெற்றது. இந்தச் சிறப்புக்குக் காரணமானவர், இவ்வாலயத்தில் உள்ள ரிஷபதாண்டவமூர்த்தி உற்சவர்.

Story image


பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். இந்த உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாம் காண இயலாது.

தல வரலாறு

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச் சென்றனர். இதைக் கண்ட விநாயகர், தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதக் கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர், சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி, சிவனை இந்திரன் வேண்ட, அவர் இந்திரனுக்கு அமுதக் கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். சிவனும் அங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.

Story image
Story image

இந்திரனின் தாய் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது, விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், தேர்ச்சக்கரத்தை விநாயகர் தன் காலால் மிதித்துக்கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்தின், இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்து "தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி" இங்கு வந்து தன்னை வணங்கும்படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.

கோவில் அமைப்பு

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது.

அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரம் இல்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன.

Story image

கருவறை, தேர்ச் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வர வேண்டும். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும்போது, விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார்.

Story image

கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர், நந்தியுடன் இருக்க, அவருக்குக் கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன் தொடை மீது இருத்தி, ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

ரிஷபதாண்டவமூர்த்தி

இத்தலத்தில், நந்தி மீது நடனமாடிய கோலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி  10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்கமுடியும். இவருக்குக் கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

ஆரவார விநாயகர்

Story image


இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர்ச் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் மற்ற சிறப்புகள்

Story image

பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சுவாமி மீது சந்திர ஒளி விழுவதும் சிறப்பு.

ஒரு பிரதோஷ நாளில் திருக்கடம்பூர் சென்று பிரதோஷ கால பூஜையில் கலந்துகொண்டு ரிஷபதாண்டவமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.
புகைப்படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.