காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் முதலாவதாக இருப்பது திருவாட்போக்கி என்ற இத்தலம். தற்போது, மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.
உயிரைப் பறிக்க வரும் எமதூதர்கள், நாம் யாராக இருந்தாலும் அதற்காக தங்கள் கடமையில் இருந்து தவறுவதில்லை. அவர்கள் வரும் சமயம் கதறிப் புலம்பி பயன் இல்லை. அவர்கள் வந்து நம் உடல் வேறு உயிர் வேறு எடுப்பதற்கு முன்பே, வாட்போக்கி இறைவனைத் தொழுது நம் வினைகள் தீர வேண்டினால், ராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் நம் எல்லோரையும் காப்பார் என்று திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் நமக்கு தெரிவிக்கிறார். அதனால், எம பயம் நீங்க இத்தல இறைவனை இப்பதிகம் பாடி தொழுதல் நன்று.
இறைவன் பெயர்: வாட்போக்கி நாதர், ரத்தினகிரீஸ்வரர்
இறைவி பெயர்: கரும்பார்குழலி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.
எப்படிப் போவது
திருச்சி - கரூர் சாலையிலுள்ள குளித்தலை என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து தெற்கே மணப்பாறை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் ரத்தினகிரி என்னும் இடத்தில் ஒரு மலையின் மீது இத்தலம் அமைந்திருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம், திருச்சி -ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில்
(வாட்போக்கி) ஐயர்மலை,
சிவாயம் அஞ்சல்,
வைகநல்லூர் (வழி),
திருச்சி மாவட்டம் - 639 124.
இவ்வாலயம், தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்
தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், திருகடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருவாட்போக்கி (ரத்தினகிரி) தலத்தில் உள்ள ரத்தினகிரிநாதரை பகலில் தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. இங்கு அகத்தியர் உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர்.
ரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி, அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன், அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து ரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றது என்று சொல்வர். மன்னனுக்கு ரத்தினம் கொடுத்து உதவியதால், இறைவன் ரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்.
இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி கிழக்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஈசனுக்கு மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக் கோவிலும், அதன் பிராகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால், இத்தலத்துக்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு. தலவிருட்சம் வேப்ப மரம். இந்திரனால் உண்டாக்கப்பட்ட சிறப்புடையது. இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.
ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த போரில் வாயுதேவன் மேரு மலையிலிருந்து பெயர்த்து எடுத்த ஒரு முடியே இத்தலம். இந்திரன், சூரியன், உரோமேச முனிவர், ஆதிசேஷன், துர்க்கை, அகத்தியர், சப்தகன்னியர் ஆகியோர் பூஜித்த இத்தலத்தில், மலைமேல் உள்ள கோவிலை அடைய சுமார் 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்ல வேண்டும். மேலேறிச் செல்வதற்கு வசதியாக படிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் கி.பி. 1783-ல் அமைக்கப்பட்டவை.
ஏறும் வழியில் அங்கங்கே 4 கால் மண்டபங்களும் இருப்பதால், அவ்வப்போது களைப்பாறி மலை ஏறலாம். அடிவாரத்திலுள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்க வேண்டும். அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார வளைவு உள்ளது. படிகள் ஏறத் தொடங்கும்போது ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அவரையும் வணங்கிவிட்டு மலை ஏறலாம். சுமார் 75 படிகள் ஏறியவுடன், பொன்னிடும் பாறை என்ற சந்நிதி உள்ளது. 750 படிகளைத் தாண்டிய பின்பு உகந்தாம் படி வருகிறது. இங்கு விநாயகர் சந்நிதியும், கிழக்கு நோக்கியுள்ள அம்பாள் சுரும்பார்குழலி சந்நிதியும் உள்ளன. அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம்.
கோயிலுக்குள் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதிதான். தரிசித்து உள்ளே நுழைந்தால், மேற்கு நோக்கி உள்ள ரத்தினகிரிநாதர் தரிசனம் கிட்டுகிறது. சிவராத்திரி நாட்களில் அல்லது முன்பின் நாட்களில், சூரிய ஒளி சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது. கோயில் உள்ளே நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இத்தல இறைவன் ரத்தினகிரீஸ்வரருக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.
இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம், இறைவன் ஆணையில் எரிந்துபோனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச் செய்தி. “காகம் அணுகாமலை” என்பர். இதை உறுதிப்படுத்துவதுபோல், இந்த மலையின் உச்சியில் காகம் பறப்பதில்லை.
அகத்தியர், இந்திரன் முதலியோர் பூசித்து அருள் பெற்ற இத்தல இறைவனுக்கு மத்தியான சுந்தரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தை வழிபட வருவோர், இங்கு இந்திரனால் உண்டாக்கப்பட்ட வேப்ப மரத்தையும், இறைவனையும் வழிபட்டுத் திரும்பும்பொழுது, வயிரவீரப்பெருமாள் சந்நிதியையும் வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே இடி பூஜை தடைபெறுகிறது. ஆயினும் ஆலயத்துக்கோ, அதிலுள்ள சிலா மூர்த்தங்களுக்கோ எந்தவொரு பாதகமும் ஏற்படுவதில்லை.
திருநாவுக்கரசர் பாடியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1. காலபாசம் பிடித்து எழு தூதுவர்
பாலகர் விருத்தர் பழையார் எனார்
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
2. விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறுமின்களே.
3. வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி ஓடி நரகத்து இடாமுனம்
அந்தியின் ஒளி தாங்கும் வாட்போக்கியார்
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.
4. கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின் விளக்கை இருள் நீங்கவே.
5. மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும் என் உள்ளமே.
6. கானம் ஓடிக் கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியாமுனம்
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.
7. பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே.
8. நாடி வந்து நமன்தமர் நல் இருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே.
9. கட்மு அறுத்துக் கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்டமாமலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே.
10. இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே
அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார் அவர் தங்கட்கே.
திருநாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

