பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருக்கலிகாமூர். இந்நாளில் இத்தலம் அன்னப்பன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வயிறு சம்பந்தப்பட நோய்கள், மற்ற பிணிகள் யாவும் நீங்க வழிபட வேண்டிய தலம் இது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்: அழகம்மை
எப்படிப் போவது
சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன்பேட்டை வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே ஊர் உள்ளது. ஊரின் நடுவில், சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தென்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
அன்னப்பன்பேட்டை, தேனாம்பட்டினம் அஞ்சல்,
வழி மங்கைமடம், சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 106.
இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
இப்பகுதியில் வாழ்ந்து வந்த வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். தென்திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். இறைவன் அருளால் அவனது வயிற்று வலி பாதியளவு நீங்கியது. பின்பு அவன் திருமுல்லைவாயில் தலத்திலிருந்து கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதை எடுத்துவந்து வழிபட, அவனது தீராத வயிற்று வலி மறைந்தது. பின், இறைவன் ஆசரீரியாக இட்ட ஆணைப்படி இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இத்தல ஈசனுக்கு அருகில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
இந்தப் புராண வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு, இன்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வில்வ மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இத்தலம் வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்து, அந்த வில்வத்தை பிரசாதமாக உட்கொண்டு வர தீராத வயிற்று வலி நீங்கும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.
சம்பந்தரால் 11 திங்கட்கிழமைகள் பாடப்பெற்ற இத்தல பதிகத்தை, வீட்டிலேயே பாராயணம் செய்து 12-வது திங்கட்கிழமை இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், வயிற்று வலி மற்றும் பிற பிணிகள் யாவும் நீங்கி பலன் பெறலாம் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
உதிரன் என்ற அசுரனை பராசர முனிவர் அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால், ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
கோவில் அமைப்பு
உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர முனிவர் காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
வலம் முடித்து உட்சென்றால், நேரே மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இத்தலத்தின் அம்பாள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவள். சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும்போது, இறைவன் கடற்கரை அல்லது நதிக்கரைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் அம்பாள் அழகம்மை மாசி மாத பெளர்ணமி அன்று கடலில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறாள். இது தவிர மாத பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா போன்ற விசேஷங்களும் இத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்துக்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தில் இத்தல இறைவனை வணங்கித் துதிக்க துன்பங்கள் தொடராது, அத்துன்பங்களுக்குக் காரணமான, அனுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும், சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும், சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும், அவர்கள் எந்தவித குறைவும் இல்லாமல் இருப்பார்கள்,
மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும், இத்தல இறைவனை வணங்கிப் போற்ற, அவர்களை நோய்கள் வந்து அணுகாது என்று பலவிதமாகப் போற்றிப் பாடியுள்ளார். 4-வது பாடலில் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் என்றும், அவர்கள் எமனது சுற்றத்தார் ஆவார்கள் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.
மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.
தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.
வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.
கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.
ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.
அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.
மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.
ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண
ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.
சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் முருக. இரமேஷ்குமார் ஓதுவார் சிவகாசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

