/

செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் - சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகப் போற்றப்படுவது வைத்தீஸ்வரன்கோவில்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

என்.எஸ். நாராயணசாமி

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகப் போற்றப்படுவது வைத்தீஸ்வரன்கோவில். இதைத் தவிர வேறு சில சிவத்தலங்களும், வைணவத்தலங்களும்கூட செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரத் தலங்களாக பக்தர்களால் வழிபடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருச்சிறுகுடி என்ற இத்தலம்.  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

    இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்

    இறைவி பெயர்: மங்களநாயகி

 எப்படிப் போவது?

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து, அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி, சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்துக்கு வர சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்

சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல்

வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 609 503.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

தல வரலாறு

ஒருமுறை, கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்துவிட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்துவைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக்கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.
 

Story image

திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால், இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர், மங்களநாதர் என்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதி உள்ளது. நவகிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு, மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவகிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாகத் தோற்றமளிக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
 

Story image

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் திருமேனி சிறியது. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவே உள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. அம்பாள் மங்களநாயகிக்குத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரை காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
 

Story image

உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி அளிக்கிறார். பார்த்து ரசிக்க வேண்டிய திருஉருவம்.. இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது.

Story image

செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்குவந்து வழிபட்டால், அங்காரக தோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது விசேஷமானது. ஆலயத்துக்கு வெளியே, நேர் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.
 

Story image

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகுக்கு அப்பால் உள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 11-வது பாடலில், தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி என்று பாடியுள்ளார். அந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் இறைவனுக்கு முன் உள்ள மண்டபத்தில் ஒரு தேன்கூடு இருப்பதைப் பார்க்கலாம். சாளரம் அமைத்து அதன் வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்துபோகுமாறு செய்துள்ளனர், மண்டபத்தின் உட்புறத்தில் இரும்பு வலை போட்டுப் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவு உடையீரே
படமலி அரவு உடையீர் உமைப் பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே.

சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே
சுற்றிய சடைமுடிர் உம தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே.

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடையீரே
துள்ளிய மானுடையீர் உம் தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே.

செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடியீர் உமைப் பேணி நஞ்சு
அற்றவர் அருவினை இலரே.

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடையீரே
மங்கையை இடமுடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே.

செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடியீரே
வெறிகமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்
நெறி உணர்வோர் உயர்ந்தோரே.

திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித்தீரே
தசமுகன் உரநெரித்தீர் உமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.

செருவரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய்தீரே
இருவரை அசைவு செய்தீர் உமை யேத்துவார்
அருவினை யொடு துயர் இலரே.

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோடு அமண் புறத்தீரே
புத்தரோடு அமண் புறத்தீர் உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.