/

திருமண பிரார்த்தனைத் தலம் மணவாளேஸ்வரர் கோவில், திருவேள்விக்குடி

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருவேள்விக்குடி.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:19 pm

என்.எஸ். நாராயணசாமி

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருவேள்விக்குடி. சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.

இறைவன் பெயர்: மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்: பரிமளசுகந்த நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் உள்ளன. இந்த இரண்டு பதிகங்களும் திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்துக்கும் பொதுவான பதிகங்களாக இருக்கின்றன.

Story image

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. மயிலாடுதுறையில் இருந்து மகாராஜபுரம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாகச் செல்கின்றன.

ஆலய முகவரி
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்,
திருவேள்விக்குடி,
குத்தாலம் அஞ்சல், குத்தாலம்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 801.

ஆலய தொடர்புக்கு - தொலைபேசி எண்: 04364 - 235462, கைபேசி: 9942239089.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Story image

தல வரலாறு 
ஒருமுறை சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்துகொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான், அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

Story image

சுய உருவம் பெற்ற அம்பிகை, ஈசனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து பூஜை செய்து வர, 17-வது திங்கள்கிழமை சிவபெருமான் தோன்றி உமாதேவியை திருமணம் செய்துகொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி - சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியவை இத்தலத்தில்தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 

அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட, அவளின் உறவினர்கள் அரசகுமாரனுக்கு பெண் தர மறுத்து இத்திருமணத்தை நிறுத்திவிட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்றுபோன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டுவரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

Story image

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர்கள் இத்தலம் வந்து இறைவன் மணவாளேஸ்வரரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் சிவபெருமான் திருமணக் கோலத்தில் கல்யாணசுந்தரராக காட்சி அளிக்கிறார்.

Story image

கோவில் அமைப்பு 
இங்குள்ள கோவில் மூன்று நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களும் உடையதாகத் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்தமண்டம், மகாமண்டபம் உள்ளன. இறைவன் கருவறை கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்தமண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் திருஉருவங்கள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். அகத்தியர், வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்தமண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது. அம்பாள் பரிமளசுகந்த நாயகியின் சந்நிதி, முதல் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. இத் திருக்கோயிலுக்கு கருங்கல் திருப்பணி செய்தவர் உத்தம சோழனது தாயாராகிய செம்பியன் மாதேவி ஆவார்.

Story image

ஆலயத்தின் தீர்த்தமான கெளதுகாபந்தன தீர்த்தம், ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரே உள்ளது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகாபந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில்தான் சிவபெருமான் - உமாதேவி திருமணம் நடைபெற்றது.

Story image

இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

Story image

இத்தலத்துக்கான சம்பந்தர் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

2. தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

3. மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

4. கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே

5. வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே

6. பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

7. புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

8. நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார் 
பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

9. கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

10. அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

11. விண் உலாம் விரிபொழில் விரைமணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண் உலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை
நண் உலாம் புகலியு ளருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே.

இத்தலம் பற்றி சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருமதி வசந்தி

இத்தலம் பற்றி சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.