/

ராகு - கேது தோஷம் நீக்கும் தலம் பாம்புபுரேஸ்வரர் கோவில், திருப்பாம்புரம்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு - கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:48 am

என்.எஸ். நாராயணசாமி


பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு - கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம்.

Story image

     இறைவன் பெயர்: சேஷபுரீஸ்வரர், பாம்புபுரேஸ்வரர்
     இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலியம்மை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

Story image

எப்படிப் போவது
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருபாம்புரம்,
சுரைக்காயூர் அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 203.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக, அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம்; இந்திரன் சாபம் நீங்கிய தலம்; கங்கை பாவம் தொலைந்த தலம்; சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.

Story image



ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி, கோவில் அர்ச்சகர் வழி பரிகாரங்கள் செய்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். ராகு - கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இக் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.
 

Story image

தல வரலாறு

கைலாயத்தில் ஒருமுறை, சிவபெருமானை விநாயகர் வழிபடும்போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன், நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல்பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க, இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை வழிபட்டால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே, ஆதிசேஷன் தலைமையில் நாக இனங்கள் அனைத்தும் சிவராத்திரி முதல் சாமத்தில், கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புநாதரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புபுரேஸ்வரரை வழிபட்டால், எல்லா வகையான நாக தோஷங்கள் விலகிவிடுகின்றன. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலருடனும், மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.
 

Story image

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இத் தலத்துக்கு மிக அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவில் பிராகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால், திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால், இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும், அச்சமயம் கோவிலுக்குள் பாம்புகள் எங்கேனும் உலாவிக்கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்துக்கு உள்ளது.
 

Story image

2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி காலையில், முதல் கால பூஜைக்காக சந்நிதி திறக்கப்படும்போது இறைவன் மேனியில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை இருந்ததை ஆலய அர்ச்சகர்கள் கண்டனர். அது தற்போது இறைவன் சந்நிதிச் சுற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Story image

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

1. சீர் அணி திகழ் திருமார்பில் வெண்ணூலர்
திரிபுரம் எ ரிசெய்த செல்வர்
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர்
மான்மறி ஏந்திய மைந்தர்
கார் அணி மணிதிகழ் மிடறு உடை அண்ணல்
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னகராரே.

2. கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னகராரே.

5. நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னகராரே.

6. ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்
ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம் வள்ளல்
மான்மறி ஏ ந்திய மைந்தர்
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய
அலைகடல் கடைய அன்று எழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர்
பாம்புர நன்னகராரே.

7. மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுக ஒழித்து
ஆலின்கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி
அனலது ஆடும் எம் அடிகள்
காலனைக் காய்ந்து தம்கழல் அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள்
பாம்புர நன்னகராரே.

8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னகராரே.

9. கடிபடு கமலத்மு அயனொடு மாலும்
காதலோடு அடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடை அமரர் முனிகணத்தவர்கள்
முறைமுறை அடிபணிந்து ஏத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னகராரே.

10. குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும்
குற்றுவிட்டு உக்கையர் தாமும்
கண்டவாறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும்
கையர்தாம் உள்ளவாறு அறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னகராரே.

11. பார் மலிந்து ஓங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னகராரைக்
கார் மலிந்து அழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.

Story image

ஞானசம்பந்தர் தேவாரம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.