ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம்

காவிரி தென்கரையில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்கள் வரிசையில் 29-வது தலமாக திருநாகேஸ்வரம் விளங்குகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:43 pm

என்.எஸ். நாராயணசாமி

காவிரி தென்கரையில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்கள் வரிசையில் 29-வது தலமாக திருநாகேஸ்வரம் விளங்குகிறது.

இறைவன் பெயர்: சண்பகாரண்யேஸ்வரர், நாகேஸ்வரர்

இறைவி பெயர்: கிரிகுசாம்பிகை, பிறையணி நுதல் அம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என 6 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்,
திருநாகேஸ்வரம்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 204.

ஆலயம் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8.45 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Story image

பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம், நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையது. பாதாள உலகத்தில் இருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால், இக்கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும், நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிராகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.

பொதுவாக, ராகு மனிதத் தலை, பாம்பு உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால், அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது பாலின் நிறமும் நீலமாகிவிடுகின்ற அதிசயத்தையும் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை.

1986-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் நாள், ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து, இவரது பெருமையை உலகுக்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப்படுத்தி கண்ணாடிப்பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்கு இது காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது.

Story image

இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், ராகு - கேது தோஷம் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற நீங்க ராகு தசை, ராகு புத்திக் காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச் சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னனுக்கும் அசுரகுலப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து, மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டுவிட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு, தன் கையில் இருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும், அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க, இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

கோவில் அமைப்பு

ஒரு காலத்தில் இத்தலம் செண்பகவனமாகக் காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிராகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது.

Story image

கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனி சந்நிதிகள் உள்ளன.

அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதப் பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகிறது. கார்த்திகை மாதத்து பௌர்ணமி நாளில் அன்னையை தரிசிக்கப் பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

Story image

இது தவிர, தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக கிரிகுசாம்பிகை சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரிகுசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

கிரிகுசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்குக் காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம்கொண்ட சக்தி, அர்த்தநாரீஸவரராக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக்கொண்டு வலம் வந்தார். அதைக்கண்டு வெகுண்ட அம்மை, தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், ரத்தத்தையும் எடுத்துக்கொண்டாள். எலும்புக்கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும், சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக்கொள்ளவில்லை.

தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன், அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும், பிறகு மதுரையில் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி, பூலோகத்தில் செண்பகவனமான இத்தலத்துக்கு தவம் செய்ய வந்தபோது, அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸ்வரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.

Story image

பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான், திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக, கிபி 12-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து, இரண்டாம் பிராகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்தில்தான் என்பது இன்னுமொரு சிறப்பாகும்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரிகுசாம்பிகை சந்நிதி உள்ள தனிக்கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரியபுஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகிறது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு, ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களால் ஆன சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவது போன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கௌதம முனிவர் இங்கே வழிபட்டு அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். சந்திரவர்மன், இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப்பெற்றான்.

Story image

சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி ஞாயிறு மாலை, ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப்போல கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.

காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்புரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.

திருஞானசம்பந்தர் தனது பதிகப் பாடல் ஒன்றில் திருநாகேசுரத்தில் உறையும் இறைவனை நாள்தோறும் நினைத்து வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயது செய்யாமல் நல்லது செய்யும். அதனை மனத்தில் கொண்டு இத்தல இறைவனை வழிபடுவீர்களாக என்று குறிப்பிடுகிறார். அந்தப் பாடல்…

காளமேகந் நிறக்காலனோடு அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.

இத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலைப் பாடியவர் பொன் முத்துக்குமரன்

இத்தலத்தைப் பற்றிய அப்பரின் தேவாரப் பாடலைப் பாடியவர் பி. சற்குருநாதன் ஓதுவார்

Picture courtesy : www.shivatemples.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.