திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நஞ்சைக் களைந்த நீலகண்டப் பெருமான்!

பற்றற்ற துறவிகள் போல பாண்டவர் ஐவரும் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சகுனியின் சூழ்ச்சியால் நடைபெற்ற சூதாட்டத்தில் நாடு, நகரம், சகோதரர்கள், மனையாள் அனைவரையும் பகடைக்காய்களாக வைத்து

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:21 pm

உமாகல்யாணி

பற்றற்ற துறவிகள் போல பாண்டவர் ஐவரும் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சகுனியின் சூழ்ச்சியால் நடைபெற்ற சூதாட்டத்தில் நாடு, நகரம், சகோதரர்கள், மனையாள் அனைவரையும் பகடைக்காய்களாக வைத்துத் தோல்வியுற்ற தருமபுத்திரன் முகத்தை மூடிக் கொண்டு, தனது சகோதரர்களோடு கானகம் புறப்பட்டார். ஒற்றைத் துகிலுடன், அவிழ்ந்த கூந்தலுடன் சபதம் செய்திட்ட திரௌபதி முகத்தை மறைத்தபடி நிலத்தைப் பார்த்தபடி தொடர்ந்தாள். மரவுரி அணிந்த வீமன் உடன் வர, மண்ணை வாரிக் கைப்பிடியிலிருந்து ஒழுகவிட்டபடி பார்த்தன் கண்கலங்கியபடி தொடர்ந்து சென்றான். உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டபடி நகுலனும், முகத்தைப் பிறர் கண்டு கொள்ளாதபடி வண்ணம் பூசிக் கொண்டு சகாதேவனும் அவர்களோடு உடன் சென்றனர். போகும் வழியெல்லாம், முனி சிரேஷ்டர்களை சந்தித்து, வணங்கி ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர் அறுவரும்!

  எப்படியாவது "அக்ஞாத வாசத்தின்'போது (தலை மறைவு வாழ்க்கை) பாண்டவர்களை அடையாளம் கண்டு பிடித்து, மீண்டும் வனவாசத்துக்கு அனுப்பிட பல சூழ்ச்சிகளைக் கையாளத் துவங்கினான் துரியோதனன். பாண்டவர்கள் காவிரி ஆற்றின் கரையில் சஞ்சாரம் செய்வதை அறிந்து, அவர்களை ஒரேயடியாக அழித்திட சதித்திட்டம் தீட்டினான். தௌமிய முனிவருடன் பாண்டவர்கள் சென்று கொண்டிருந்த பாதையை உளவறிந்தான்! அதன்படி காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள பழ மண்ணிப்படிக்கரை தலத்தை நோக்கி, தனது ஏவலாளிகளை அனுப்பி வைத்தான். அங்கே பிரம்ம தீர்த்தத்தில் நீராட பஞ்சபாண்டவர் நிச்சயம் வருவர் என்று எதிர்பார்த்த துரியோதனன், அதில் நஞ்சைக் கலந்திடச் செய்தான்.



நஞ்சைக் களைந்த நீலகண்டன்!

சந்திர வம்சத்து அரசர்கள், மிகுந்த சிவபக்தி கொண்டவர்கள். வழிவழியாய் வந்த அந்தப் பாரம்பரியத்தை பாண்டவர்கள், மிகுந்த ஈடுபாட்டுடன் பின்பற்றி வந்தனர். அவர்களுக்கு துரியோததனால் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த பெரும் ஆபத்தைக் களைய முற்பட்டார் ஈசன். ஆபத் சகாயர் அல்லவா அண்ணல்! பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தன்னை வழிபட வரும் பாண்டவர்கள், பழமண்ணிப்படிக்கரை தலத்தின் எல்லையை எட்டும் முன்னே, நச்சு கலந்த பிரம்ம தீர்த்தத்தின் நீரை அமுதம் கலந்த நன்னீராக்கினார் நஞ்சுண்டேசுவரரான நீலகண்டன். ஆம்! நீலகண்டன் என்பதே, அத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனின் திருநாமம் ஆகும்!



அமுத நீர்!

உரோமச முனிவரின் அறிவுரையை ஏற்று பாண்டவர் ஐவரும், நீலகண்டேசுவரரை தரிசித்திட பழமண்ணிப்படிக்கரை தலத்திற்கு விரைந்தனர். வசந்த ருதுவில், சித்திரைத் திங்கள் முழுநிலா நாளன்று அவர்களுக்கு அந்தப் பேறு கிட்டியது. பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அமுதகரவல்லி என்று திருநாமங்கொண்ட அன்னையுடன் அருள்பாலிக்கும் நீலகண்டேசுவரரை வணங்கி வழிபட்டனர்.



இன்னல் களையும் இனிய தீர்த்தம்

  "பிரம்ம தீர்த்தம்' பஞ்ச பாண்டவர்களை மட்டும் அழிவிலிருந்து காத்திடவில்லை! துந்து என்ற கந்தர்வனின் தொழுநோய் அகலவும், நளனின் கலிவலி தீரவும், வேங்கை வரிப்புலியாக பிறந்து, இந்த திருத்தலத்தில் மரித்த கரும சேனன் என்போன் சிவலோகம் சென்றிடவும், வீரபாதன் என்ற பெருச்சாளி சாபம் நீங்கப் பெறவும் காரணமான புனிதத் தீர்த்தம்தான் அது.

தருமசேனன் துவக்கிவைத்த சித்திரைத் திருவிழா

நீலகண்டேசுவரரின் திருவருளால் மீண்டும் அரியணை ஏறிய தருமபுத்திரர் துவக்கிவைத்த சித்திரைத் திருவிழா, பத்து நாட்கள் உற்சவமாக இன்றும் பழமண்ணி படிக்கரை திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது. மாசி மகத் திருநாளில் கொள்ளிடக்கரைக்கு "தீர்த்தவாரி'க்காக எழுந்தருளுகிறார் நீலகண்டேசுவரர். "பாப்பாகுடி' என்று இன்று அழைக்கப்படும் பார்த்தன்குடி வழியே, மறுநாள் இலுப்பைப்பட்டு திரும்புவார் எம்பெருமான்.

இலுப்பைப்பட்டு

  இலுப்பை மரங்களடங்கிய பகுதியில் இத்திருத்தலம் அமைந்திருந்தமையால், "இலுப்பைப்பட்டு' என்று அழைக்கப்படுகிறது. "ரேவதி' நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய விருட்சம், இலுப்பை மரம் ஆகும். எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர், இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படும் பழமண்ணிப்படிக்கரை திருத்தலத்தைத் தரிசித்து, வாழ்வில் வளம் பெறலாம். சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தைப் போற்றிப் பாடுகையில் "பழமண்ணிப் படிக்கரை' என்று குறிப்பிட்டுள்ளார். 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், "திருநீலகண்டம் உடைய நாயனார்' என்று இத்தலத்து இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.



புனித நன்னீராட்டுப் பெருவிழா

இத்தகைய புராண, வரலாற்றுப் பெருமைகள் பல கொண்டுள்ள பழமண்ணிப்படிக்கரை திருக்கோயில், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது ஆகும். ஆறு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட திருப்பணிகள் செவ்வனே முடிவடைந்து, புதுப் பொலிவுடன் திகழும் பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் திருக்கோயிலில் ஆவணி 14ம் நாள், 30.8.2009 ஞாயிற்றுக்கிழமை, காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள், திருக்குடப் புனித நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இருப்பிடம்

  "பழமண்ணிப்படிக்கரை' திருத்தலத்தை இலுப்பைப்பட்டு என்றே மக்கள் அழைக்கின்றனர். நாகை மாவட்டம், வைத்தீசுவரன் கோயிலுக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது "மணல்மேடு' என்ற ஊர். அங்கிருந்து வடக்கே 2 கி.மீ. சென்று இத்திருத்தலத்தைச் சென்றடையலாம். கும்பகோணம் வழியே செல்பவர்கள், சென்னை சாலையில் திருப்பனந்தாள்-பந்தநல்லூர் வழியே மணல்மேடு சென்று, இலுப்பைப்பட்டை அடையலாம். எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேற, நீலகண்டேசுவரரைப் போற்றிப் பணிவோம்! கும்பாபிஷேகப் பெருவிழாவை கண்டு மகிழ்ந்திட கூடிடுவோம் பழமண்ணிப்படிக்கரையில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.