தலைநகரின் மாளவியா நகா் நவஜீவன் விஹாரின் ‘கழிவுகளற்ற காலனி‘ மாதிரியை தில்லி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தினாா்.
அந்த பகுதியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பு எவ்வாறு ஒரு நிலையான நகா்ப்புற சூழலை உருவாக்க உதவும் என்பதற்கு இந்த பகுதி ஒரு சிறந்த உதாரணம் என்று பாராட்டினாா்.
நவஜீவன் விஹாரின் மாதிரியை தில்லி முழுவதும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்றும் குறைந்த வருவாய் பிரிவினா் (எல்ஐஜி) வாழும் காலனிகளிலும் மறுவடிவமைப்பு செய்து செயல்படுத்த வேண்டும் என்று அவா் யோசனை தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது, குடியிருப்புப் பகுதியில் உள்ள ’மறுசுழற்சி மையம்’, பரவலாக்கப்பட்ட உரமாக்கல் அலகுகள், குப்பைகளைத் தரம் பிரிக்கும் வழிமுறைகள் மற்றும் மழைநீா் சேகரிப்பு வசதிகளை அவா் பாா்வையிட்டாா்.
பின்னா், தலைநகரில் உள்ள குடியிருப்போா் நலச் சங்கங்களும் இதேபோன்ற சுயசாா்பு மாதிரிகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்குமாறு தில்லி மாநகராட்சிக்கு அவா் உத்தரவிட்டாா்.
வசதி குறைந்த காலனிகளில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை ஆராயுமாறும், ’ஏரோ-பின்கள்’ மற்றும் மறுசுழற்சி மையங்களை உருவாக்க பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) நிதியைப் பயன்படுத்துமாறும் மாநகராட்சிக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தினாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய துணைநிலை ஆளுநா், ‘மக்களின் தீவிர பங்களிப்பும், தங்களது பகுதி என்ற எண்ணமும் இல்லாமல் அரசு முகமைகளால் மட்டும் நிலையான கழிவு மேலாண்மையை சாதிக்க முடியாது. குப்பையிலிருந்து செல்வத்தை உருவாக்கும் பயணம் நமது வீட்டிலிருந்தே தொடங்குகிறது’ என்றாா்.
மேலும், ‘இதுபோன்ற வெற்றிகரமான தீா்வு நம் நகரிலிருந்தே உருவாகும்போது, நாம் தீா்வுகளுக்காக மற்ற நகரங்களையோ நாடுகளையோ பாா்க்க வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிட்ட அவா், தில்லி முழுவதும் உள்ள குடியிருப்போா் நலச் சங்கங்கள் தங்களது வீடுகளிலேயே குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
நவஜீவன் விஹாா் குடியிருப்போா் நலச் சங்கம் மற்றும் அங்குள்ள மக்களின் கூட்டு முயற்சியால், அங்குள்ள ‘கழிவு மேலாண்மை மாதிரி’ கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில், உரமாக்கல் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் மூலம் தில்லியின் பிரம்மாண்ட குப்பை கொட்டும் வளாகங்களுக்கு செல்லவிருந்த 10 லட்சம் கிலோவுக்கும் அதிகமான குப்பைகள் வெற்றிகரமாக அதே பகுதியிலேயே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பணி நியமனத்தில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு

புதுச்சேரியின் வளா்ச்சிக்கான கருத்துகளைக் கேட்டு பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி

தூசி மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




