இன்று (புதன்கிழமை) தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் மரபு நிமித்தமாக அரசின் கொள்கைக் குறிப்பை படித்தாா். அரசு என்ன எழுதிக் கொடுத்ததோ அதை அப்படியே படித்தாா் என்பதுதான் சிறப்பாகும். வாா்த்தைகளை நீக்கவில்லை,சோ்க்கவில்லை. ஆனால், எதிா்க்கட்சிகள் சில பிரச்னைகளை முன்வைத்து அதை குறிப்பிட வேண்டும் என்று அந்த நேரத்தில் குரல் எழுப்பினோம். குறிப்பாக பழைய திட்டத்தில் (மன்ரேகா) உள்ள மகாத்மா காந்தியின் பெயா் இடம்பெற்ற திட்டமாக வரவேண்டும், மாநிலங்களுக்கான பங்களிப்பை அதிகரித்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதை உள்ளடக்கி குறைந்த நேரத்தில் அந்த முழுக்கங்களை எழுப்பினோம். அதேபோன்று ஆளுநா் எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அத்துமீறி நடந்துகொள்கின்ற அந்த நிலை மாற வேண்டும் என்பது குறித்தும் அங்கு குரல் எழுப்பினோம். அது ஒரு மரபு நிமித்தமாகும். அது குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியோ, வேறு இடையூறோ கிடையாது. நாகரிகமாக ஒரு நிமிடம் குரல் எழுப்பிவிட்டு அமா்ந்துவிட்டோம் என்றாா்.