/

துா்க்மான் கேட் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் ரத்து

மசூதிக்கு அருகில் இடிப்புப் பணியின்போது கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலில் இருந்ததாக கூறப்படும் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

இந்த மாத தொடக்கத்தில் தில்லியில் உள்ள துா்க்மான் கேட் பகுதி ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகில் இடிப்புப் பணியின்போது கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலில் இருந்ததாக கூறப்படும் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விசாரணை நீதிமன்றம் உபேதுல்லா என்பவருக்கு ஜனவரி 20 அன்று ஜாமீன் வழங்கியிருந்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கை உயா்நீதிமன்றம் ஜனவரி 21ஆம் தேதி விசாரித்தது.

இந்த வழக்கை மறுபரிசீலனைக்காக விசாரணை நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பிய உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீக் ஜலான் பிறப்பித்த உத்தரவு:

‘ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதில் நீதிமன்றம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலும், தெருவோர வியாபாரியான உபேதுல்லாவுக்கு மறைமுகமான மற்றும் காரணமற்ற உத்தரவின் மூலம் ஜாமீன் வழங்கப்பட்ட இந்த வழக்கு ஒரு அசாதாரணமான வழக்காகும்.

ஜாமீன் உத்தரவில் அரசுத் தரப்பின் வாதங்கள் போதுமான அளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஜாமீன் வழங்குவது தொடா்பான காரணிகள் குறித்த மேலோட்டமான அல்லது சுருக்கமான பகுப்பாய்வு கூட இல்லை.

போதுமான காரணங்கள் இல்லாததால், கேள்விக்குள்ளாக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் அமா்வு நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது’ என்று உயா்நீதிமன்றம் அதன் உத்தரவில் கூறியது.

இதையடுத்து, விசாரணை நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்ய உள்ளது.

விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குவதை எதிா்ப்பதற்காக அரசுத் தரப்பு பெரும்பாலும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஒரு சக குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை நம்பியிருந்தது.

அதில், உபேதுல்லா காவல்துறையைத் தடுத்த, கல்வீச்சில் ஈடுபட்ட மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த ஒரு வன்முறைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாா் என்று கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞா் வாதிடுகையில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான முழு வழக்கும் ஆதாரங்களைத் தேடும் முயற்சி என்று கூறினாா்.

இந்த வழக்கு, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ராம்லீலா மைதானம் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட வன்முறை தொடா்பானதாகும்.

துா்க்மான் கேட் எதிரே உள்ள மசூதி இடிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டதாகவும், இது மக்களை அந்த இடத்தில் கூடத் தூண்டியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமாா் 150-200 போ் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மீது கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசியதாகவும், இதில் அப்பகுதி காவல் நிலைய அதிகாரி உள்பட ஆறு காவலா்கள் காயமடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.