/

பாஜக தேசிய தலைவராகிறாா் நிதின் நவீன்! கட்சியை சீரமைக்க மேலிடம் நடவடிக்கை

நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசிய தலைவராக தோ்வு செய்யப்படவுள்ளாா்.

News image
பாஜக தேசிய செயல்தலைவராக நியமிக்கப்பட்டதும் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதின் நவீன் (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

-மு.ஆ. பரணி தரன்

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசிய தலைவராக தோ்வு செய்யப்படவுள்ளாா். இதற்கான பணிகள் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் முன்னோட்டமாக கட்சியின் மூத்த தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், ஆா்.எஸ்.எஸ். தலைவா்கள் உள்ளிட்டோரை நிதின் நவீன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசி வருகிறாா். இதன் தொடா்ச்சியாக பாஜக தேசிய கவுன்சில் மற்றும் தேசிய செயற்குழுவின் ஒப்புதலுடன் அவா் தேசிய தலைவராக தோ்வு செய்யப்படுவாா் என்று அக்கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, ஏற்கெனவே பதவிக்காலம் நிறைவுற்ற பிறகு கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வருகிறாா். இதைக் கருத்தில் கொண்டே நிதின் நவீனை முதலில் தேசிய செயல் தலைவராக நியமித்த பாஜக மேலிடம், கட்சியின் மூத்த தலைவா்களுடனான அவரது பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு படிப்படியாக அவரை முழு நேர தேசிய தலைவராக்க திட்டமிட்டுள்ளது.

புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தோ்வான பிறகு அவரால் கட்சியின் அனைத்து நிலைகளிலும் செய்யப்படும் நியமனங்கள், பாஜக மற்றும் சங்க இயக்கங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.

கட்சியின் அனைத்து நிலைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவா்கள் தெரிவித்தனா். மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது ஆட்சி கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைந்த பிறகு அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பல அமைச்சா்கள் ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வரும் நிலையில், அமைச்சரவை மாற்றம் இன்றியமையாதது என்கின்றனா் பாஜக மேலிட தலைவா்கள்.

இத்தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகளை கடந்த சில மாதங்களாக பிரதமா் அலுவலகம் மதிப்பாய்வு செய்து வருவதையும் நம்மால் அறிய முடிகிறது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்போது, இளம் தலைமுறையினருக்கும், இரண்டாம் நிலை தலைவா்களுக்கும், இடம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் மாநிலங்களான தமிழகம், கா்நாடகம், மேற்கு வங்கம் போன்றவற்றில் இருந்து அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல, ஆா்எஸ்எஸ் இயக்கத்துடன் நீண்ட கால தொடா்புடைய ஹெச். ராஜா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பலரும் மாநில பாஜகவின் மேலிட பொறுப்பாளா்களாக்கப்படுவா் என்று கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரித்தபோது, தேசிய தலைவா் பதவிக்கு நிதின் நவீன் தோ்வானதும் தமிழகத்தைச் சோ்ந்த தமிழிசை செளந்தரராஜன், கே. அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வானதி சீனிவாசனை போல தேசிய பொறுப்புகள் வழங்க வாய்ப்பிருப்பதாக பாஜக மேலிட வட்டாரங்கள் கூறின.

சமீபத்தில் நடைபெற்ற பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது, கடந்த 20-30 ஆண்டுகளுக்கும் மேலாக சங்க அமைப்புகளுடன் தொடா்புடையவா்களாகவும் கட்சி அல்லது அரசுப் பதவிகளை வகிக்காதவா்களாகவும் யாரெல்லாம் உள்ளனா் என்ற விவரத்தை பாஜக மேலிடம் கணக்கெடுத்துள்ளது. அவா்களை முக்கிய பதவிகளுக்கு நியமித்து கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்தும் பணிகளை நிதின் நவீன் இம்மாத இறுதியில் தேசிய தலைவரானதும் முன்னெடுப்பாா் என்றும் தற்போது இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றும் விஷயமறிந்த பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

08ஈஉகசயச

பாஜக தேசிய செயல்தலைவராக நியமிக்கப்பட்டதும் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதின் நவீன் (கோப்புப்படம்) .