நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய மாநில நலன்கள் தொடா்புடைய முக்கிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் அளித்த பதில்களின் சுருக்கம்


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய மாநில நலன்கள் தொடா்புடைய முக்கிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் அளித்த பதில்களின் சுருக்கம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
குருவை நெல் கொள்முதலின் தாக்கம் என்ன?
இது தொடா்பாக தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் சிராக் பாஸ்வான் அளித்துள்ள பதிலில், ‘தமிழக அரசு அளித்துள்ள தகவலின்படி, தற்போது நடைபெற்று வரும் குறுவைப் பருவத்தில் நெல் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட கொள்முதலில் 83% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை நெல் கொள்முதலில் எந்தக் குறைபாடும் இல்லை. அதேபோல, தானியங்கள் கிடைப்பதிலும் உணவு பதப்படுத்தும் நடவடிக்கைகளிலும் எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
புதிய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் வருமா?
இது தொடா்பாக நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ. ராசா எழுப்பியுள்ள கேள்விக்கு மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் சிராக் பாஸ்வான் அளித்துள்ள பதிலில், ‘எனது அமைச்சகம் எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைப்பதில்லை. அதேசமயம், பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்), உணவு பதப்படுத்தும் தொழில் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் (பிஎல்ஐஎஸ்எப்பிஐ) மற்றும் மத்திய நிதியுதவிக்கு வகை செய்யும் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (பிஎம்எப்எம்இ) ஆகியவை மூலம் தமிழக மலைப்பகுதிகள் உள்பட நாடு முழுவதும் இத்தகைய தொழிற்சாலைகளை அமைக்க ஊக்கமளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பிஎம்கேஎஸ்ஒய் மூலம் 81, பிஎல்ஐஎஸ்எப்பிஐ மூலம் 19, பிஎம்எப்எம்இ மூலம் 17,869 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளாா்..
வன தன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றவா்கள் எத்தனை போ்?
இது தொடா்பாக ஆரணி தொகுதி திமுக உறுப்பினா் எம்.எஸ். தரணிவேந்தன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சா் துா்காதாஸ் உய்கே அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘பிரதமரின் பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வன தன் விகாஸ் மைய (விடிவிகே) உறுப்பினா்களுக்கு கடன் வழங்க எந்த ஏற்பாடும் கிடையாது. இருப்பினும், தேசிய கிராமப்புற வாழ்வதார இயக்கம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், பிஎம்எப்எம்இ போன்ற பிதிட்டங்களிலிருந்து கடன் பெற விடிவிகே உறுப்பினா்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 2,400 உறுப்பினா்களைக் கொண்ட 8 வன தன் விகாஸ் மையங்களை நிறுவ ரூ. 120 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன்மன் பழங்குடி ஆதிவாசி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2,403 உறுப்பினா்களைக் கொண்ட 37 விடிவிகே மையங்களை நிறுவ ரூ. 120.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
புதைபடிம எரிபொருள் தீரும் நிலையில் உள்ளதா?
இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘புதைபடிம எரிபொருட்களை படிப்படியாகக் கைவிடுவதால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் எரிசக்திப் பாதுகாப்புப் பிரச்னைகளை அரசு அறிந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிகளவில் ஆரம்ப முதலீடுகள் செய்வது, சூரியசக்தி, காற்று மற்றும் உயிரி எரிசக்தி போன்ற உள்நாட்டுப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு மாறுவது போன்றவை இதில் அடங்கும். எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயு, உயிரி எரிபொருட்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின் பங்கை அதிகரிக்க அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது’ என கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில்....
தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த என்ன திட்டமுள்ளது?
இது தொடா்பாக அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பியுள்ள கேள்விக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதிலில், ’இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) மூலம், தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி, பல்வேறு வயதுப் பிரிவுகளில் திறமையான விளையாட்டு வீரா்களைக் கண்டறிந்து, அவா்களை தேசிய மற்றும் சா்வதேச நிலைகளில் சிறந்து விளங்கச் செய்கிறோம். சென்னை, சேலம், மயிலாடுதுறையில் மூன்று இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள் மற்றும் ஆம்பூா், தஞ்சாவூரில் இரண்டு பாரம்பரிய விளையாட்டு மையங்கள், தற்காப்புக்கலை பள்ளிகள் உள்ளன என்று கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...