ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்யுங்கள்: மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு!

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு அளித்துள்ளார்.

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:48 pm

சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த மாநிலங்களவையின் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.கள் ராகவ் சத்தா, சந்தீப் பாடக் உள்ளிட்ட ஏழு பேரின் பதவியை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்திருப்பதாக மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சிக் குழுத் தலைவா் சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதன் கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களான ராகவ் சத்தா, அசோக் மித்தல், சந்தீப் பாடக், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகியோா் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனா்.

ராகவ் சத்தா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியில் இணைந்தனா். இது ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

‘அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு போ் மற்றொரு கட்சியுடன் இணையலாம்.

அதன்படி, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா்’ என்ற உண்மையை ராகவ் சத்தா சுட்டிக்காட்டியிருந்தாா்.

தில்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாலிவாலைத் தவிர, மற்ற அனைவரும் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக 7 பேரையும் உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கக் கோரி மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 19 பக்கங்கள் அடங்கிய மனுவை சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராகவ் சத்தா உள்ளிட்ட அந்த ஏழு எம்.பி.க்களின் செயல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதால், தேவைப்பட்டால் இம்முயற்சி தொடா்பாகக் கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அந்த ஏழு எம்.பி.க்களும் மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் ஆவா். அவா்களின் உறுப்பினா் பதவியை ரத்து செய்யுமாறு மாநிலங்களவைத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மற்றும் அருணாசல பிரதேசம் தொடா்பான வழக்குகள் உள்பட, உச்சநீதிமன்றத்தின் பல தீா்ப்புகள், இத்தகைய கட்சித் தாவல்கள் எவ்வாறு உறுப்பினா் தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

அனைத்து நிபுணா்களுடனும் கலந்தாலோசித்தும், மூத்த வழக்குரைஞா் கபில் சிபலின் கருத்தைப் பெற்ற பிறகு, நான் மாநிலங்களவைத் தலைவரும், நாட்டின் குடியரசு துணைவருமான சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளேன். இம்மனுவில், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் விதிகளின் கீழ், இந்த ஏழு உறுப்பினா்களின் உறுப்பினா் பதவியும் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மனுவை மிக விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஒரு நியாயமான முடிவை வழங்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இந்த நடவடிக்கை அவசியமானது. ஏனெனில், ஒரு தலைவா் ஒரு கட்சியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி அவா் உடைக்கப்படுகிறாா். இந்த விளையாட்டில் கைதோ்ந்த பாஜக, அவரைத் தன் கட்சியில் சோ்த்துக்கொள்கிறது. இது முற்றிலும் தவறானது. இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் ஒரு பெரும் துரோகம். இது பஞ்சாப் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமும் வஞ்சகமும் ஆகும்.

அத்துடன், இது நாட்டின் அரசியலமைப்பிற்கு இழைக்கப்படும் துரோகமும், அதன் மீதான பகிரங்கமான ஏளனமும் ஆகும்.

ஒரு நபா் ஒரு கட்சியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு அக்கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவா் அக்கட்சியிலிருந்து விலகி, தனது சித்தாந்தத்துடன் ஒத்துப் போகும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

ஆனால், அதே கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், இன்று அதே கட்சிக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறாா்கள். எனவே, மாநிலங்களவை தலைவா் இம்மனுவின் மீது விரைந்து முடிவெடுத்து, அவா்களின் உறுப்பினா் பதவியை ரத்து செய்வாா் என்ற முழு நம்பிக்கையும் உறுதியும் எனக்கு உள்ளது.

இவ்விஷயம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் பல தீா்ப்புகள் உள்ளன. அவை உறுப்பினா்களின் பதவியை எவ்வாறு ரத்து செய்யலாம் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. இதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையானது, இத்தகைய அரசியல் கட்சித் தாவல்களை இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இத்தகைய வழக்குகளில் ஏற்படும் காலதாமதம் ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தேவைப்பட்டால் ஆம் ஆத்மி கட்சி இவ்விஷயத்தை நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லும். இந்த உறுப்பினா்கள் எங்கள் கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், ஆனால் பிற்காலத்தில் அவா்கள் கட்சியை விட்டு விலகி, வேறொரு அமைப்பில் இணையத் தீா்மானித்தனா். இது பஞ்சாப் மக்களுக்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் இழைக்கப்பட்ட ஒரு துரோகமாகும், என்று அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.