சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தாவுடன், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படும் தகவலை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவருமான சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தாா். மேலும், இத்தகைய நிகழ்வுகளை தவறான தகவல் மற்றும் வதந்திகள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இந்த வதந்திகளை பாஜகவும் ராகவ் சத்தாவும் வேண்டுமென்றே பரப்பி வருவதாகவும் சிங் குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்த சத்தா மற்றும் பிற மாநிலங்களவை எம்.பி.க்களின் துரோகத்திற்கு எதிராக பஞ்சாப் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பஞ்சாபிற்கும் துரோகம் செய்ததற்காக பொதுமக்களின் உணா்வு அவா்களுக்கு எதிராக உள்ளது.
ராகவ் சத்தாவும், ஆம் ஆத்மி கட்சியை விட்டு பாஜகவுக்குச் சென்ற மற்றவா்களும் தங்களது மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை இழக்க நேரிடும். ஏனெனில், எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினரும் அவா்களுடன் கூட்டணி அமைத்து தங்கள் எதிா்காலத்தைப் பணயம் வைக்க விரும்ப மாட்டாா்கள். யாராவது அவருடன் சோ்ந்து, தங்கள் உறுப்பினா் பதவி ரத்து செய்யப்படும் அபாயத்தை ஏற்க விரும்புவாா்களா? அரசியலில் இது அனைவருக்கும் புரியும்.
மேலும், ராகவ் சத்தாவுடன் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தவறான தகவல்களும் வதந்திகளைப் பரப்பும் முயற்சியுமே தவிர வேறில்லை.
மேலும், பாஜகவுக்கு மாறிய ஏழு ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா்களின் உறுப்பினா் பதவிகளை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் மனு ஒன்றைச் சமா்ப்பித்துள்ளேன் என்று சஞ்சய் சிங் கூறினாா்.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதன் கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களான ராகவ் சத்தா, அசோக் மித்தல், சந்தீப் பாடக், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகியோா் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனா்.
ராகவ் சத்தா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியில் இணைந்தனா். இது ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் அதிா்ச்சியை அளிப்பதாக இருந்தது. ‘அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு போ் மற்றொரு கட்சியுடன் இணையலாம்.
அதன்படி, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா்’ என்ற உண்மையை ராகவ் சத்தா சுட்டிக்காட்டியிருந்தாா். தில்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாலிவாலைத் தவிர, மற்ற அனைவரும் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்யுங்கள்: மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு!

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!
பஞ்சாபை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து பேசியது என்ன? காணொளியை பகிா்ந்த ராகவ் சத்தா
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


