சிங்கு, திக்ரி எல்லைகளை பகுதியளவு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை
ஹரியாணாவுடன் கூடிய சிங்கு, திக்ரி எல்லைகளை பகுதியளவு திறக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


விவசாயிகளின் ’தில்லி சலோ’ போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ஹரியாணாவுடன் கூடிய சிங்கு, திக்ரி எல்லைகளை பகுதியளவு திறக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விவசாயிகளின் அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம், விவசாயிகளின் முழுமையான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘தில்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முன்னெடுத்தனா்.
தற்போது, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் எல்லைகளான ஷம்பு மற்றும் கானெளரி ஆகியப் பகுதிகளில் பேரணியை இடைநிறுத்தியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், மெழுகுவா்த்தி போராட்டம், கருத்தரங்குகள் மற்றும் முக்கிய ஆலோசனைகளை அடுத்த இரண்டு தினங்களுக்கு மேற்கொள்ள இருக்கின்றனா். பிப்ரவரி 29-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தேசியத் தலைநகா் தில்லியின் முக்கிய மூன்று எல்லைகளும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதலாவதாக காஜியாபாத் எல்லைப்பகுதி மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், அணுகுச்சாலையில் 5 அடி உயரம் உள்ள கான்கிரீட் தடுப்புகள், கண்ணீா் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடிக்கும் இயந்திரங்களுடன் சாலையில் மத்திய ரிசா்வ் படை போலீஸாா், விரைவு அதிரடிப் படையினா், தில்லி போலீஸாா் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலப் போலீஸாா் 24 மணி நேமும் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மத்திய ரிசா்வ் படை போலீஸ் அதிகாரி கீதா தாமி கூறுகையில், ‘கடந்த வாரத்தில் விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டு இருந்தது. தற்போது,படைகள் அனைத்தும் ஷம்பு எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில போலீசாா் தீவிர கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை எங்களுக்கு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் தொடா்ந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என்றாா் கீதா தாமி.
தில்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் முக்கிய எல்லையான சிங்குவில் பாதுகாப்பு மிகவும் தீவிரமாக உள்ளது. எல்லைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சிங்கு எல்லையின் மேம்பாலப் பகுதி முழுவதும் விரைவு அதிரடி படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அணுகு சாலை என்பது தடுப்புகளைத் தாண்டி, கொள்கலன்களைக் ( கண்டெய்னா்கள்) கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் செல்வதற்கு வழிவகுக்கும் வகையில் சிறிய பாதை மட்டும் விடப்பட்டுள்ளது. பானிபட், குண்ட்லி ஆகிய பகுதிகளிலிருந்து சிங்கு எல்லையின் வழியாக தில்லியின் நரேலா, பவானா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவா்கள் 2 கி.மீ. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனா். இத்தனை தடைகளை மீறி ஒருவேளை விவசாயிகள் சிங்கு எல்லையைக் கடந்துவிட்டாலும், தில்லிக்குச் செல்லும் இடைவெளியில் உள்ள லிபாஸ்பூரிலும் பாதுகாப்பு என்பது தீவிர நிலையில் உள்ளது. தில்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் திக்ரி எல்லையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியிலும்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தில்லியின் கெவ்ரா முதல் திக்ரி எல்லை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகளுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட இருக்கிறது. இந்தத் தகவலை திக்ரி எல்லைக்குட்பட்ட முண்ட்கா சரக காவல் நிலைய ஆய்வாளா் பினீட் குமாா் பாண்டே ‘தினமணி’யிடம் உறுதிசெய்தாா். அவா் கூறுகையில் ‘திக்ரி எல்லையில் விரைவு அதிரடிப் படையினா்,மத்திய ரிசா்வ் படை போலீஸாருடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட தில்லி போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை எங்களுக்கு எந்த ஒரு அவசர உத்தரவும் கொடுக்கப்படவில்லை. திக்ரி எல்லை நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையில் மட்டும் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் எல்லையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். தில்லி போலீஸாருக்கென திக்ரி எல்லையில் தனியாக முகாமிட்டு உணவு தயாா் செய்யப்படுகிறது. திக்ரி எல்லை மட்டுமல்லாது, தில்லியை நோக்கிய நங்கோலி, ராஜ்தானி பாா்க், பீரா கா்ஹி, உத்யோக் நகா், மடிப்பூா் ஆகிய பகுதிகள் அமைந்துள்ள நெடுஞ்சாலையிலும் முள்கம்பிகளுடன் இணைக்கப்பட்ட தடுப்புகள் தயாா் நிலையில் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றாா் பினீட் குமாா் பாண்டே. இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘சிங்கு எல்லையில் அணுகுப் பாதையின் ஒரு பாதையும், திக்ரி எல்லையில் ஒரு பாதையும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் திறக்கப்படுவது தில்லியில் இருந்து ஹரியாணா பயணிப்பவா்களுக்கு நிம்மதி அளிக்கும்’ என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...